ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் கட்சிகளுடன் கலந்துரையாட முடிவு: சுரேஸ்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நியமிப்பதற்காக தமிழ் தேசியப்பரப்பில் உள்ள தமிழ் கட்சிகளுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கலந்துரையாடவுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பலப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் பிரகாரம் மாவட்ட மட்டத்தில் குழுக்களை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

8 மாவட்டங்களுக்குமான குழுக்கள் இந்த மாத இறுதியில் அமைக்கப்படும். இதன் பின்னர் அனைத்து மாவட்ட குழுக்களையும் ஒன்று கூட்டி கூட்டமொன்றினை வவுனியாவில் மே மாதம் 25 ஆம் திகதி நடத்தவுள்ளோம் இதனூடாக கிராம மட்டத்தில் எமது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை கொண்டு செல்லும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும்.

அடுத்து நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பாக நாம் கொள்கை ரீதியில் முடிவெடுத்துள்ளமை தொடர்பிலும் ஏனையவர்களுடன் கலந்துரையாடி வருகின்றோம்.

தற்போது இவ்விடயம் இங்கும் புலம்பெயர் தேசத்திலும் பேசுபொருளாக மாற்றப்பட்டுள்ளது. சில சிவில் அமைப்புக்களும் இதனை முன்னெடுத்து செல்லும் பணியை செய்கின்றனர்.

இந்த வகையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியானது தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளுடன் பேசவுள்ளோம். அத்துடன் தமிழ் தேசிய பரப்பில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் முக்கிய அமைப்புக்களுடனும் கலந்துரையாடவுள்ளோம்.

 அதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் உள்ள அணியொன்று செயற்படும். இவர்கள் தமிழரசுக்கட்சி, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் பேச விரும்பும் கட்சிகளுடனும் கலந்துரையாடுவோம்.

 தற்போது இலங்கையில் பொருளாதார பிரச்சனை மாத்திரம் மட்டுமே உள்ளது இனப்பிரச்சனை இல்லாதது போன்றதும் அது முடிந்து விட்டது போன்றதுமாக சொல்லப்படுகின்றது.

ஆனால் இலங்கையில் பொருளாதார பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமாயின் தமிழ் மக்களின் தேசிய பிரச்சனை தீர்ககப்படால்தான் அது சாத்தியம் என்ற விடயம் இருக்கின்றது.

அதனை சரியாக செயற்படுத்துவதற்கு நாம் இந்த ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும். எனவே இந்த மாத இறுதிக்கிடையில் ஏனைய தமிழ் தேசிய கட்சிகளுடன் கலந்துரையாடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *