”220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரே நாம் தான்” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று ஐக்கிய மக்கள் சக்திக்கும் சுதந்திர மக்கள் கூட்டணிக்கும் இடையில் இடம்பெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” நாட்டைப் பொருளாதார மற்றும் சமூக அவலங்களில் இருந்து மீட்டெடுக்கும் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளோம். மக்களின் ஆணையால் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தில் யாரும் தனிப்பட்ட முறையில் சுகபோகங்களை அனுபவிக்க முடியாது.
220 இலட்சம் மக்களின் பொருளாதார, சமூக, அரசியல் நலன்களைப் பாதுகாக்கும் பாதுகாவலரே நாம் தான். ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கம் எதிர்காலத்தில் அதிகபட்ச தியாகங்களைச் செய்யும்.இலங்கையை உலகில் முதலிடத்திற்கு கொண்டு வரும் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
எம்மால் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு செயலும் பொதுநலன், பொதுமக்கள் பங்கேற்பு மற்றும் மக்களின் முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கியே அமைந்திருக்கும். இன்னும் மக்கள் மையமாக கொண்டு பல கூட்டணிகள் எதிர்காலத்தில் உருவாகும்.
இந்த கூட்டணிகளின் பின்னணியில் சலுகைகளோ அல்லது வரப்பிரசாதங்களோ வழங்கப்படவில்லை, நாட்டின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சுயநலமின்றி பொது மக்களுக்கு தன்னலமின்றி சேவையாற்றும் உன்னத பொது சேவைக்காக அணி திரள்வோம்.
இனம், மதம், சாதி, குலம், கட்சி பேதமின்றி நாட்டை முன்னோக்கி கட்டியெழுப்பும் பயணத்தில்
220 இலட்சம் மக்களுக்கும் தலைமைத்துவம் வழங்க நாம் தயார்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.