தேவேந்திர முனையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் தெற்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 65 கிலோ போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த போதைப்பொருளை மறைத்துக்கொண்டு சென்ற இலங்கையின் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரிதொரு படகும் சுற்றிவளைக்கப்பட்டு அதிலிருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கடற்படையின் சுரனிமல என்ற கப்பலின் ஊடாக நேற்று குறித்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 – 52 வயதுக்குட்பட்ட மாத்தறை, கந்தரை மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இது குறித்த மேலதிக விசாரணைகளை கடற்படை புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.