ஜனவரி 01 முதல் நீர்க் கட்டணமும் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத இதனைத் தெரிவித்தார்.

2024 ஜனவரி முதல் VAT வரியானது, 15% இலிருந்து 18% அதிகரிக்க கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

அதற்கமைய, அண்மையில் VAT திருத்தச் சட்டமூலம் கடந்த டிசம்பர் 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.

இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய இரண்டாவது மதிப்பீடு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

அந்த வகையில் ஒரு சில பொருட்களுக்கு VAT வரி நீக்கப்பட்டதோடு, மேலும் சில பொருட்களுக்கு VAT வரி புதிதாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், நீர் கட்டணம் 3% இனால் அதிகரிக்கப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத குறிப்பிட்டுள்ளார்.

அது மாத்திரமன்றி, டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கு வரி சேர்க்கப்படுவதால் அதனை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரக் கட்டணத்திலும் திருத்தம் ஏற்படும் என எதிர்பாரக்கப்படுகின்றது.

இதேவேளை, சமையல் எரிவாயுவிற்கான கட்டணத்திலும் திருத்தம் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆயினும் ஒரு சில பொருட்களுக்கான துறைமுக மற்றும் விமான சேவை வரி (PAL) (2.5 – 10% வரி) நீக்கப்பட்டு அவற்றுக்கு VAT வரி மாத்திரம் சேர்க்கப்படவுள்ளதால் அதில் ஏற்படும் பாதிப்பு மிகக் குறைவு என நிதியமைச்சு குறிப்பிட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *