ஈரான், பாகிஸ்தான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம்!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் மூண்டுள்ளது.

இஸ்ரேல் – காசா போருக்கு மத்தியில் பாகிஸ்தான் – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் அவசரக் பாதுகாப்பு ஆலோசனை கூட்டத்தை நடத்த அந்நாட்டு பிரதமர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார்.

ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, 2 நாட்களின் பின்னர் நேற்று சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் ஏவுகணைகள், ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) மூலம் துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இதில், 4 குழந்தைகள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பலூசிஸ்தான் விடுதலை இராணுவம், பலூசிஸ்தான் விடுதலை முன்னணி ஆகிய இரு பயங்கரவாத அமைப்புகளின் மறைவிடங்கள் மீது பாகிஸ்தான் துல்லியத் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதலில் ஈரான் நாட்டைச் சாராத 9 போ் உயிரிழந்ததாக மாகாண துணை ஆளுநா் அலிரேசா மா்கதி தெரிவித்துள்ளாா். இந்தச் சம்பவத்துக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் செயல்படும் ஜெய்ஷ் அல்-ஆதில் என்ற சன்னி பிரிவு பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் கடந்த செவ்வாய்க்கிழமை ஈரான் தாக்குதல் நடத்தியது.

தங்கள் நாட்டு வான்வெளி எல்லைக்குள் அத்துமீறி ஈரான் தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டிய பாகிஸ்தான், ஈரானுக்கான தனது நாட்டு தூதரைத் திருப்பப் பெற்றது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதா், தன்னுடைய நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவா் திரும்ப வர வேண்டாம் என பாகிஸ்தான் அறிவித்தது.

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவு தெரிவித்து, ஈரான் ஆதரவு ஹூதி கிளா்ச்சியாா்கள் செங்கடல் பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனா். இதனால், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

ஈரானில் அண்மையில் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பிறகு, ஈராக், சிரியாவைத் தொடா்ந்து பாகிஸ்தானிலும் ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, பாகிஸ்தானும் ஈரான் மீது நடத்திய துல்லியத் தாக்குதல் புதிய பிரச்னையை எழுப்பியுள்ளது.

இதற்கிடையில், ஈரானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதல்களால் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது. அனைத்து தரப்பினரும் நிதானமாக செயல்பட வேண்டுமென அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

ஈரானும் பாகிஸ்தானும் சுமார் 900 கிமீ எல்லையை பகிர்ந்து கொள்கின்றன, இது இரு நாடுகளுக்கு இடையே தீவிரவாதிகளை சுதந்திரமாக நடமாட உதவுகிறது. 1988 ஆம் ஆண்டு ஈரான்-ஈராக் போருக்குப் பிறகு ஈரான் மண்ணில் நடந்த முதல் ஏவுகணைத் தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாக்குதல் மற்றும் எதிர்த்தாக்குதலானது, ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இஸ்ரேல்-காசா போரின் கீழ் தத்தளித்துக் கொண்டிருக்கும் மத்திய கிழக்கின் மற்ற பகுதிகளுக்கு வன்முறை பரவும் அச்சுறுத்தலை தோற்றுவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *