இலங்கையில், துன்பங்களை அனுபவித்து வரும் காணாமற் போனோரின் குடும்பங்கள்: ICRC

காணாமற் போனோர் தொடர்பான நிச்சயமற்ற தன்மைக் காரணமாக நாட்டில் பல குடும்பங்கள் துன்பங்களை அனுபவித்து வருவதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர், வன்முறை சூழ்நிலைகள், பேரழிவுகள், மனிதாபிமான அவசர நிலைகள் மற்றும் இடம்பெயர்வு போன்றவற்றினால் உலகளாவிய ரீதியில் ஆயிரக்கணவர்கள் காணாமல் போயுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்பது தொடர்பாக தெளிவற்ற நிலையில் வாழும் குடும்பங்களுக்கு வேதனையும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்படுத்துவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் குடும்பங்கள், அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்வது மிகவும் அவசியமானது எனவும் அச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பெரும்பாலும் காணாமல் போனவர்கள் குடும்பத்தை ஆதரிப்பவராக இருக்கின்ற நிலையில், அவர்கள் இல்லாதமையானது அவர்களின் குடும்பங்களின் பொருளாதார, சட்ட மற்றும் நிர்வாக சவால்களை அதிகரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அறிய மக்களுக்கு உரிமை உண்டு எனவும் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், காணாமல் போனவர்களின் நிலை மற்றும் இருப்பிடம் குறித்து கண்டறியும் முயற்சிகளுக்கு தகவல்கள் மற்றும் உதவிகளை வழங்குவதற்கு அதிகாரிகள் கடமைப்பட்டுள்ளனர் எனவும் அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *