அ.தி.மு.க. கூட்டணி: தே.மு.தி.க.வுக்கு கூடுதல் தொகுதி ஒதுக்கீடு? 

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது.

மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன்படி, அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. இரண்டு கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அ.தி.மு.க, தேமுதிக இடையே மார்ச் 16 ஆம் தேதி 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையின் போது, அ.தி.மு.க. கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளிலும் ஒரு மாநிலங்களவை இடத்துக்கும் போட்டியிட தேமுதிக விருப்பம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. அப்போது 4 தொகுதிகள் வரை ஒதுக்க அ.தி.மு.க. சம்மதம் தெரிவித்திருந்திருந்தது.

அதே சமயம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம், உயர்மட்டக் குழு கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தைலாபுரத்தில் இன்று (18.03.2024) நடைபெற்றது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், கூட்டணி விவகாரத்தில் திடீர் திருப்பமாக இந்த கூட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் பா.ம.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பாமக இடம் பெறாததால், தே.மு.தி.க.விற்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் பா.ம.க. இல்லாததால் தற்போது 6 முதல் 7 மக்களவைத் தொகுதிகளைக் கேட்க உள்ளதாகவும் தேமுதிக சார்பாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாகத் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட ஒதுக்கக் கோரும் சில தொகுதிகளில் தே.மு.தி.க.வும் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்ததால் அ.தி.மு.க. – பா.ம.க. – பா.ஜ.க. கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *