விகாரைகள் அமைக்கப்படுவதும், படையினரால் நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மனித எச்சங்களை மறைக்கவே:

மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வியாழக்கிழமை (14.09) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மனிதவுரிமை மீறல் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என தென்னிலங்கை தலைவர்கள் கோரும் நிலையில், குறிப்பாக ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

கொக்குதொடுவாயில் மனித புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டு அதில் முன்னாள் பெண் போராளிகளது எச்சங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என தென்னிலங்கை தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு அவர்கள் மௌனம் சாதிக்க முடியாது.

இலங்கை அரசாங்கம் அதாவது கோட்டபாய அவர்கள் ஜனாதிபதியாக இருக்கும் போதும், அவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் போதும் பல கொடுமைகளை எங்களது மக்களுக்கு இழைத்திருக்கின்றார். 

பல இன்னல்களையும், மனிதவுரிமை மீறல்களையும் அவர் செய்துள்ளார். அந்தக் குடும்பம் மற்றும் அதில் சம்மந்தப்பட்டவர்கள் அத்தனை பேரும் சர்வதேச விசாரணையில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

மன்னாரில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் கிடப்பிலே உள்ளது. இப்படி ஒவ்வொரு இடத்திலும்  மனித எச்சங்களை கண்டு பிடித்து கிடப்பில் போடும் நிலை தான் காணப்படுகிறது. 

ஆகவே இந்த விடயத்தில் சர்வதேசம் சரியான கவனத்தை எடுக்க வேண்டும். புத்த கோவில்கள் அமைப்பது, இராணுவம் பல இடங்களை பிடிப்பது இதற்கான காரணங்கள் எல்லாம் அவர்கள் பிடிக்கின்ற இடங்களை தோண்டுகின்ற போது எங்களது மக்களின் மனித எச்சங்கள் உள்ளது. அந்த விடயத்தை மறைப்பதற்காகவே இவை துரிதமாக நடைபெறுவதாக நான் சந்தேகப்படுகின்றேன்.

ஆகவே, இந்த விடயத்தில் ஒட்டுமொத்த சிங்கள தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும். சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் கோருகின்றார்கள்.  அந்தவகையில் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கபடும் வகையில் தென்னிலங்கையில் உள்ளவர்களும் மனச்சாட்சிப்படி நடக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *