இலங்கைக்கு வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மடிகணனிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உதிரிப்பாகங்களுடன் சந்தேகநபர்கள் இருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் (12) பிற்பகல், விமானம் மூலம் இலங்கை வந்த இரண்டு விமானப் பயணிகள் வரி செலுத்தாமல் இலங்கைக்கு மடிகணனிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உள்ளிட்டவற்றை கொண்டு வந்திருப்பதாக விமான நிலைய பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, விமான நிலைய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று ரூ. 80 இலட்சத்திற்கு அதிகமான பெறுமதியான மடிகணனிகள் மற்றும் கையடக்கத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்களுடன் இரு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 39 மற்றும் 43 வயதுடைய ஹக்மன மற்றும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 47 கையடக்கத் தொலைபேசிகள், 17 மடிகணனிகள், 22 வெளிநாட்டு மதுபான போத்தல்கள், 8 சிசிடிவி கெமராக்கள் மற்றும் சார்ஜர்கள், இயர்போன்ககள் உள்ளிட்ட கையடக்கத் தொலைபேசிகளுக்கான பாகங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.