வனஜீவராசிகள் திணைக்களத்தால் மக்களின் நிலங்கள் அபகரிப்பு – றிஷாட் குற்றச்சாட்டு

மக்களுக்குச் சொந்தமான  ஆயிரக்கணக்கான ஏக்கர்  நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களமானது அபகரித்து வருவதாக  மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன்  குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த சனிக்கிழமை மன்னார்,  முசலி தேசிய பாடசாலை கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் அதிகாரத்தில் இருக்கும் போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலனத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.முசலிப் பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியியுள்ளன.

நான் அமைச்சராக இருந்த போது, முசலிப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என்மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது. வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கெதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன், மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டுமென தீர்ப்பு வந்தது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

அண்மையில் முல்லைத்தீவிழும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, ஆனால் முசலிப் பிரதேசத்தில் எதுவுமே விடுவிக்கப்படவில்லை. ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு கூறுகின்றார். 1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு அவர் கூறுகின்றார்.

1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது, இன்று நாங்கள் மக்களுக்குக் கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கின்றது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கின்றது. ஆனால், சிலர் இவற்றை எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்காமல், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம் என்பதை ஆணித்தரமா தெரிவித்துக்கொள்கின்றேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *