யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா, தமிழகத்தில் ஸி தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் முதல் இடத்தை பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமையை கில்மிஷா தனதாக்கிக்கொண்டார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமான சரிகமப இசை நிகழ்ச்சியில் மலையகத்தைச் சேர்ந்த அஷானி மற்றும் கில்மிஷா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்தநிலையில், நேற்று இறுதிப் போட்டி சென்னை நேரு உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது. இதில் வெற்றி பெற்று சரிகமப இசை நிகழ்ச்சியில் கில்மிஷா முதலிடம் பிடித்துள்ளார்.
சுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான கில்மிஷா அரியாலையை வசிப்பிடமாக கொண்டவர். அவருக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. சமூக ஊடகங்களில் கில்மிஷாவுக்கு இலட்சக்கணக்கானோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, சரிகமப இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற யாழ்ப்பாண சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்தார்.