முல்லை – பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சுமார் 100 க்கு மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள்!

முல்லைத்தீவு மாவட்டம் – இரணைப்பாலை கிராமத்தில் தனியார் காணி ஒன்றில் இருந்து சுமார் 100 க்கு மேற்பட்ட அண்ணளவாக  50 இலட்சத்திற்கும் அதிக  பெறுமதியுடைய முதிரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பு  பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தல் இடம்பெற்று வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றார்கள்.

வனவள திணைக்களம், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களின் ஆதரவுடனே இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் இவர்களது சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக யாரும் நடவடிக்கை எடுப்பதில்லை என தொடர்ச்சியாக மக்களால்  தெரிவிக்கப்பட்டுவந்தது.

இந்த நிலையில், இரணைப்பாலை பகுதியில் பாரியளவில் மரக்குற்றிகள் கொண்டுவந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்றையதினம் (08.05.2024) மாலை புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட போதும்  பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்காது அலட்சிய போக்குடன் செயற்பட்டதனால் வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர் தனபால அவர்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

அதனையடுத்து வடக்கு மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ர பிரதி பொலிஸ் மா அதிபர்  அவர்களால் முல்லைத்தீவு பிரதான பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரிக்கு  வழங்கப்பட்ட உத்தரவின் பெயரில்  முல்லைத்தீவிலிருந்து வருகைதந்த விஷேட பொலிஸ் அணியினரின் நடத்திய சோதனையின் போதே குறித்த பெருந்தொகையான மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்லமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *