மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் தாழ் நிலத்தை அண்டியுள்ள வீதியில் சடலம் ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு அப்பகுதி பொதுமக்கள் வழங்கி தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு விரைந்த களுவாஞ்சிகுடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து சடலத்தை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 84 வயதுடைய ஆறுமுகம் கிருஸ்ணபிள்ளை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் உத்தரவுக்கமைய சடலத்தைப் பார்வையிட்ட களுவாஞ்சிகுடி பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெத்தினம், சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தமாறு உத்தரவிட்டுள்ளார்.
சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.