பிரித்தானியாவில் பள்ளி சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக, 39 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் டோரி கவுன்சில் தலைவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கென்ட்டில் உள்ள புகழ்பெற்ற டோன்பிரிட்ஜ் பள்ளியில் முன்னாள் டோரி கவுன்சில் தலைவர் ரஸல் டில்சன்(73) ஆசிரியராக பணியாற்றினார்.
இந்த ஆண்களுக்கான உறைவிட பள்ளியில் அவர் பணியாற்றியபோது, 1984ஆம் ஆண்டு மூன்று சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார்.
இந்த நிலையில், மைட்ஸ்டோன் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் இரு சிறுவர்கள் மீதான 4 குற்றச்சாட்டுகளில் டில்சன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு 5 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவைச் சேர்ந்த DC ஜோஷ் கியர்ங் கூறுகையில், ‘டில்சன் போன்ற பாலியல் குற்றவாளிகள் பல ஆண்டுகளாக அல்லது வாழ்நாள் முழுவதும் மௌனமாக அவதிப்படுபவர்கள்.
பலருக்கு கணக்கிட முடியாத சேதத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிர்ஷ்டவசமாக, இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் முன் வருவதற்கு அளப்பரிய தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றைய தண்டனை அவர்கள் குழந்தைகளாக இருந்தபோது அனுபவித்த அதிர்ச்சியை அகற்றாது. ஆனால் அது சில முடிச்சுகளை கொண்டு வரும் என்று நம்புகிறோம்’ என தெரிவித்துள்ளார்.