மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்ல அலங்கரிப்பு பணிகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, தரவை, மாவடிமுன்மாரி ஆகிய மாவீரர் துயிலும் இல்லங்களில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் நேற்று மட்டக்களப்பின் பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக 19 பேருக்கு எதிராக நீதிமன்றங்களின் தடையுத்தரவு கட்டளை பெறப்பட்டு தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் உள்ள மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு முன்னெடுக்கப்பட்டு வந்த ஏற்பாட்டு பணிகளை இடை நிறுத்தியதுடன் அங்குள்ள கட்டப்பட்டிருந்த கொடிகள் மற்றும் மாவீரர் நினைக்கல் என்பவற்றினை அகற்றுமாறும் குறித்த இடத்தில் நினைவேந்தல் நடாத்த முடியாது எனவும் தெரிவித்த நிலையில் அங்கு முன்னெடுக்கப்பட்ட ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டு பொருட்கள் ஏற்பாட்டாளர்களினால் கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது முன்னாள் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்குபற்ற முடியாது என நீதிமன்ற தடை கட்டளையும் வழங்கப்பட்டது.
இதேபோன்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், அருட்தந்தை ஜெகதாஸ், முன்னாள் மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் சத்தியசீலன் உட்பட 19 பேருக்கு எதிராக தடையுத்தரவு வழங்கும் பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதேநேரம் நேற்று முன்தினம் வெல்லாவெளியில் ஜனநாயக போராளிகள் கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் உபதலைவர் நகுலேஸ் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.