யாழ்/காங்கேசன்துறை – தையிட்டி பிரதேசத்தில் நீதிமன்ற தடை உத்தரவையும் மீறி அத்துமீறி தனியார் காணியில் நிர்ணயிக்கப்பட்டுள்ள விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார்.
நாளை மறுதினம் 12-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இடம்பெறவுள்ள குறித்த போராட்டத்திற்கு பெருந்திரளான மக்கள் வந்து ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டாலே அது அரசாங்கமட்டத்தில் கவனம் செலுத்தப்படும் எனவும், அதனை உணர்ந்து வலிகாமம் வடக்கு பகுதியில் இருந்து ஆங்காங்கே பரந்து வாழ்கின்ற மக்கள் அனைவரும் உட்பட யாழ் குடா நாட்டு மக்கள் முடிந்தளவு வந்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன. இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.