தமிழ்நாட்டில் நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் திட்டங்களை மேம்படுத்துவதற்காக சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உலக வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவில் மிகவும் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் வாழும் சுமார் 2 மில்லியன் மக்களின் நகர்புற குடிநீர் வசதி மற்றும் கழிவு நீர் மேம்பாடு ஆகியவற்றை பலப்படுத்தும் நோக்கில் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்க உலக வங்கி அமைப்பின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
உலக வங்கி வழங்க உள்ள நகர்புற குடிநீர் மற்றும் கழிவுநீர் மேம்பாடு திட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், அதே சமயம் கடுமையான பருவநிலை மாற்றங்களால் உருவாக கூடிய வெள்ளம் மற்றும் வறட்சியை தாங்கக்கூடிய நகரங்களை உருவாக்குவதற்கும், தமிழ்நாடு பருவநிலை மாற்றத்தை தாங்க கூடிய நகர்புற வளர்ச்சி திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல் வழங்கிய 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான தொகை செலவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் 21 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு போதுமான குடிநீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மை கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவிற்கான உலக வங்கி இயக்குநர் அகஸ்டே டானோ குவாமே(Auguste Tano Kouame), வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் நகரமயமாக்கல் செயல்பாடுகள் காரணமாக அதன் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் நோக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார்.
அப்போது, 2030 ஆண்டில் கிட்டத்தட்ட 70 சதவீத புதிய வேலை வாய்ப்புகள் நகர் புறங்களில் உருவாக்கப்படும், அத்துடன் 18 மில்லியன் மக்கள் இதற்காக நகர் புறங்களை நோக்கி வரத் தொடங்குவர் என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே அவர்களின் தாக்கங்களை சமாளிக்கும் அளவுக்கு அடிப்படை நிலைகளை வலுப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்துள்ளார்.