தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணம்: சந்திரிக்கா

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு இதுவே சிறந்த தருணமாகும். இதைவிட நல்ல நேரம் கிடைக்கப் போவதில்லை. எனவே, வாய்ப்பை சரிவர பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மாகாணசபைகளுக்கு பொலிஸ், காணி அதிகாரம் வழங்குவது தொடர்பில் வீண் அச்சம் கொள்ளவேண்டியதில்லை எனவும், மேற்படி அதிகாரங்களை வழங்கினால் நாடு பிரியும் என்ற வாதம் ஏற்புடையது அல்ல.

நாட்டில் போர் முடிவடைந்தாலும் போருக்கு வித்திட்ட பிரச்சினைக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை எனவும் அதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகூட எடுக்கப்படவில்லை.

அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டம் அரசமைப்பில் உள்ள ஓர் அங்கம். அது சட்டப்பூர்வமானது, அதனை அமுல்படுத்துமாறே தமிழ்த் தலைவர்கள் கோருகின்றனர். இதனை ஏன் அமுல்படுத்த முடியாது?

அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தும் நிலைப்பாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருக்கின்றார். இது தொடர்பில் என்னுடனும் பேச்சு நடத்தினார். முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என நான் கூறினேன். ஆனால் நாட்டில் மாகாணசபைகள் இயங்கவில்லை. அதிகாரத்தை பகிர மாகாணசபை இருக்க வேண்டும். அப்படியானால் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

இனப்பிரச்சினை விடயத்தில் அறகலய ஊடாகவும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நல்லிணக்கம் பிறந்துள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டனர். இளைஞர், யுவதிகளின் ஒன்றிணைந்த செயற்பாடுகளை காணும்போது விழிநீர் வந்தது. இது சிறந்த தருணம். நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் மறுநாளே இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைத்திருப்பேன். 13 சட்டத்தில் உள்ளது, அதனை அமுல்படுத்தினால்போதும், அதற்கு மாகாணசபைகள் இருக்க வேண்டும்.

13 இல் பொலிஸ், காணி அதிகாரம் பற்றிதான் விமர்சனங்கள் எழுகின்றன. பொலிஸ் அதிகாரம் வழங்கினால் தனிநாடு உருவாக்கப்படும் எனவும் கூறுகின்றனர். முதலில் 13 இல் என்ன உள்ளது என்பதை படித்து அறியவும். பொலிஸ்மா அதிபர் தேசிய அரசால் நியமிக்கப்படுகின்றார்,

அவரால்தான் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமிக்கப்படுகின்றனர், பொலிஸ்மா அதிபரின்கீழ்தான் இவர்கள் உள்ளனர். மாகாணத்தின் சட்டம், ஒழுங்கு தொடர்பில் இணைந்து செயற்பட வேண்டும். எஸ்.எஸ்.பியும் பொலிஸ்மா அதிபரால்தான் நியமிக்கப்பட வேண்டும். ஏ.எஸ்.பிக்கு கீழ்தான் மாகாணசபையால் நியமனம் வழங்க முடியும். இதனை செய்வதற்கு மாகாண பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி வேண்டும். அந்த நியமனத்தில் அரசியல் தலையீடு இருக்காது.

மேற்படி பொலிஸ் ஆணைக்குழுவில் மூவர் இடம்பெறுவர், ஒருவர்தான் பொலிஸ்மா அதிபரால் நியமிக்கப்படும் பிரதி பொலிஸ்மா அதிபர், மற்றையவர் அரச சேவை ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதியின் இணக்கப்பாட்டுடன் நியமிக்கப்படும் நபர், மூன்றாவது மாகாண முதல்வரின் பிரதிநிதி. எனவே, மூன்றிலிரண்டு அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது.

அடுத்தது மாகாண பொலிஸாருக்கான பயிற்சிகூட முழுமையாக மத்திய அரசால்தான் வழங்கப்படும். ஆயுத வழங்கலும் மத்திய அரசு வசம்தான் உள்ளது. அப்படியானால் பொலிஸ் அதிகாரத்தில் உள்ள அச்சம் என்ன?

மாகாணசபை எல்லைமீறி செயற்பட்டால் முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டின்கீழ் எடுக்கலாம். இராணுவத்தையும் அனுப்பலாம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *