தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்!

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி இராபர்ட் பயஸ் இன்று முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் விடுதலை செய்யப்படாமல் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலான நிலையில், அங்கு உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, விளையாடுதல் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு சக சிறைவாசிகளோடு கூட பேசவோ பழகவோ அனுமதி மறுக்கப்பட்டு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது உடல் மற்றும் மனநலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதுக் குறித்து பலமுறை தமிழ்நாடு முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோரிக்கை மனு அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுத்தப்பாடில்லை.

இதற்கிடையே சாந்தன் அவர்களும் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனுக்கு ஏற்பட்ட அந்த நிலை தனக்கும் ஏற்பட்டு விடக் கூடாது என இன்று காலை முதல் சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவித்து, வெளி நாட்டுக்கு அனுப்பி வைக்கக்கோரியும், அதற்கு உடனடியாக கடவுச்சீட்டு எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யக்கோரியும், சிறப்பு முகாமில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய அனுமதி வழங்கக்கோரியும் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டத்தை இராபர்ட் பயஸ் இன்று முதல் தொடங்கி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *