தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் தனிப்பட்ட தகவல் திரட்டலை நிறுத்த முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை விசேட கூற்றை முன்வைத்த தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரான மனோ கணேசன் எம்.பி. கொழும்பு மாவட்டத்தில் தமிழர்களை மட்டும் இலக்குவைத்து பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் தகவல் திரட்டலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தலை நிராகரித்தே இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இவ்வாறு கூறினார்.
கொழும்பில் தமிழர்களை மட்டும் இலக்காக கொண்டு தகவல் திரட்டப்படுவதாக மனோ கணேசன் கூறுவது பொய் .கடந்த முறையும் இவர் இதே பிரச்சினையை முன்வைத்த போது நான் அவரை தனிப்பட்ட முறையில் சந்தித்து தரவுகளை காண்பித்தேன் அத்துடன் பதிலளித்தேன் என்றார்.
கொழும்பு மாவட்டத்தில் வாழ்பவர்களின் விபரங்கள் பதிவு செய்யும் நடவடிக்கை 90 சதவீதமளவில் நிறைவு பெற்றுள்ளது .
சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் இந்த தகவல் திரட்டலுக்குள் உள்ளடங்குகின்றனர். இது தற்போது புதிதாக ஆரம்பிக்கப்படவில்லை. யுத்த காலத்தில் இருந்து இவ்வாறு பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்கள் கோரப்படுகின்றன.பொலிஸ் ஊடாக தகவல்கள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
ஒரு தனிநபர் எங்கு தங்கியுள்ளார் என்பது தொடர்பான தகவல் தரப்படுத்தலை பேணுவதற்காகவே இவ்வாறு தகவல் கோரப்படுகிறது. இதில் தவறொன்றும் இல்லை.
பெயர் உள்ளிட்ட தகவல் மாத்திரமே கோரப்படுகிறது. மதம் பற்றி கேட்கவில்லை.இனம் தொடர்பான விபரம் மாத்திரமே கேட்கப்படுகிறது.கடந்த முறையும் இவர் இவ்வாறு பொய் கூறினார்.
நாட்டில் யுத்தம் இல்லாவிட்டாலும் சமூக விரோத செயற்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளன. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு .
ஆகவே தகவல் திரட்டலை எதற்காகவும் நிறுத்த முடியாது. சிங்கள மொழியில் மாத்திரம் விண்ணப்பம் விநியோகிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றேன் என்றார்.