ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்று வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் நீதிமன்றத் தடையுத்தரவு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிகழ்வின் ஏற்பாட்டாளரான ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் விசாரணை என்ற பெயரில் பொலிசாரினால் அழைத்துச் செல்லப்பட்டார்.
சுமார் மூன்றரை மணிநேரம் வெல்லாவெளி பொலிஸ் நிலையத்தில் விசாரணை இடம்பெற்று மாலை 04.30 மணியளவில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்த நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பொலிசாரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைப்பதற்கான உத்தரவை களுவாஞ்சிக்குடி நீதவான் பிறப்பித்ததையடுத்து மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.