இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் லட்சுமி கிரியேஷன் சார்பில் உருவாகி இருக்கும் படம் தான் தமிழ் குடிமகன். சேரன், ஸ்ரீ பிரியங்கா, லால், எஸ்ஏசி மற்றும் பலர் நடிப்பில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. சமீபகாலமாக தமிழ் சினிமாவில் தொடர்ந்து அடக்குமுறைகள் கொண்ட படங்கள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மாமன்னன் கூட மிகப் பெரிய வெற்றி பெற்றது.
அதேபோல் தான் தமிழ் குடிமகன் படத்தின் கதையும். இறந்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யும் குலத் தொழிலை கொண்டிருக்கிறார் சேரன். ஆனால் நன்கு படித்துள்ள சேரனுக்கு அரசாங்க வேலையில் செல்ல வேண்டும் என்பதுதான் கனவாக இருக்கிறது.
ஆனால் ஊரில் உள்ள மேல் சாதி மக்கள் இவர் இறந்தவரின் உடலை எரிக்கும் வேலை தான் செய்ய வேண்டும் என்பதை தங்களது அடக்கு முறையால் சாதிக்க நினைக்கிறார்கள். மேலும் சேரன் அரசாங்க வேலைக்கான தேர்வு எழுத சென்ற போதும் அதை சூழ்ச்சி செய்து தடுத்து விடுகிறார்கள்.
அவருடைய தங்கை டாக்டருக்கு படித்து வரும் நிலையில் ஊர் தலைவராக இருக்கும் லாலின் மகனை காதலிக்கிறார். இதில் லால் குடும்பத்திற்கு தெரிய வர சேரனின் தங்கையை கடுமையாகத் தாக்குகிறார்கள். அந்த சமயத்தில் தான் லாலின் தந்தை உயிரிழந்து விடுகிறார். லால் மீது கடும் கோபத்தில் இருக்கும் சேரன் அவருடைய தந்தைக்கு இறுதிச் சடங்கு செய்ய முடியாது என்று உறுதியாக இருக்கிறார்.
கடைசியில் சேரன் மீண்டும் தனது குலத்தொழிலை செய்கிறாரா, அவரது தங்கையின் வாழ்க்கை என்ன என்பது தான் தமிழ் குடிமகன். இப்போது பெரிய நகரங்களில் இது போன்ற சம்பவங்களை நாம் பார்க்கவில்லை என்றாலும் கிராமப்புறங்களில் நிறைய சாதிய அடக்குமுறை இப்போதும் இருந்து தான் வருகிறது.
தங்களுக்கு அடிமையாகவே சிலரை வைத்திருக்க வேண்டும் என மேல் சாதியினர் நினைத்து வருகிறார்கள். அதை வெட்ட வெளிச்சம் ஆக்கும் படி தான் தமிழ் குடிமகன் படம் வந்திருக்கிறது. எப்போதும் போல கிராம கதாபாத்திரங்களில் சேரன் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வலுவான கதை இருந்தும் இயக்குனர் திரைக்கதையில் சொதப்பிவிட்டார்.