சுரங்கத்திற்குள் சிக்கிய 41 பேர் 17 நாட்களின் பின் மீட்பு!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டப்பட்டு வரும் சில்க்யாரா சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை உதவிப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.

கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால், 60 மீட்டர் தூரம் வரை சுரங்கப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, கடந்த நவம்பர் 12-ம் திகதி முதல் தொழிலாளர்கள் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்தனர்.

இந்திய தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த தொழிலாளர்களை மீட்கும் பணிகளை தொடங்கி 17 நாட்களாக சிக்கிய தொழிலாளர்களுக்கு 53 மீட்டர் நீள குழாய் மூலம் உணவு, தண்ணீர் மற்றும் ஆக்ஸிஜன் என்பவற்றை வழங்கி வந்தனர். மேலும் வைத்தியர்கள் அந்த இடத்திலேயே தங்கி சுரங்கப்பாதையினுள் சிக்கியிருந்தவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினர்.

தொழிலாளர்களைக் காப்பாற்றுவதற்காக, நிவாரணக் குழுக்கள் மண் சரிந்து வீழ்ந்த வெளியேற்றத்தின் வழியாக துளையிட முயன்றன, ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்கத் தயாரிப்பான டிரில் இயந்திரம் பழுதடைந்ததால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டது. மீட்பு நடவடிக்கையின் இரண்டாவது திட்டமாக, நிவாரணப் பணியாளர்கள் செங்குத்தாக துளையிட்டு, இறுதியாக முதல் திட்டத்தில் வெற்றி பெற முடிந்தது.

வெற்றிகரமாக துளை தோண்டிய பிறகு, நிவாரணக் குழுக்கள் துளைக்குள் ஒரு குழாயைச் செருகி தொழிலாளர்களை மீட்க முடிந்தது. இதில் கடைசி 2 மீட்டர் தூரம் பாதுகாப்பு கருதி கையால் குழி தோண்டப்பட்டிருந்தது.

41 தொழிலாளர்களை மீட்ட போது வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ்கள் தயாராக இருந்தன. மீட்க்கப்பட்டவர்கள்; கவலைக்கிடமாக இல்லை என்றும், அனைவரும் நலமாக இருப்பதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *