நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சவாலுக்கு பாஜக தயார் என்றும், அவரை விட 30 சதவீதம் வாக்கு அதிகமாக வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்சி அடிப்படையில் சீமானுக்கும், எங்களுக்கும் முரண்பாடு இருந்தாலும் திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழக மாவட்டம் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,”ஒரே நேரத்தில் அனைத்து தேர்தல்களையும் நடத்த வேண்டும். தேர்தல் மாறி மாறி வருவதால் கொள்கை ரீதியாக சரியான முடிவு எடுக்க முடியவில்லை.
தேர்தல் பாதுகாப்பு பணிகளின் போது வடகிழக்கு மற்றும் காஷ்மீர் பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்கள் குறைக்கப்படுகின்றனர்.
ஒரே நாடு ஒரே தேர்தலை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேர்தல் முறையானது பல நாடுகளில் உள்ளது. இதனால், அதிகாரிகளின் பணிச்சுமை குறையும். குடும்ப அரசியலை ஆதரிக்கும் சுயநலவாதிகள் தான் இதனை எதிர்க்கிறார்கள்” என்றார்.
மேலும் அவர்,”நாம் தமிழர் கட்சி சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. அவரை யாரையும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். அவருடைய சவாலுக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
தேர்தலில் சீமானை விட 30 சதவீதம் வாக்குகள் அதிகமாக வாங்கி காட்டுகிறோம். கட்சி அடிப்படையில் சீமானுக்கும், எங்களுக்கும் முரண்பாடு இருந்தாலும் திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும்” என்றார்.