நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ள நிலையில் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சியில் ஜல்லிக்கட்டு ராஜேஷை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்ட போது, அவர் பேசுகையில், ”என் லட்சியம் இருக்கும் வரை என்னுடைய கட்சி இருக்கும். நான் இறந்த பிறகும் என் லட்சியம் இருக்கும். அப்பொழுதும் என் கட்சி இருக்கும். வீரனாக இருந்தால் என்னுடைய கருத்தோடு மோதுங்கள். நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
பொது விவாதத்திற்குக் கூப்பிடுகிறேன் ஒரு தொலைக்காட்சியில் பேசலாம் பாஜக தமிழ்நாட்டுக்கு எதற்கு? ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கள் நான் கட்சியை விட்டு போகிறேன். யார் வேண்டுமானாலும் ஜெயிக்கலாம் இந்த நாட்டில்.
ஆனால் காங்கிரஸ், பாஜக கட்சி ஜெயிக்க கூடாது. விஷச் செடி அவர்கள். தமிழ் இனத்திற்கு அல்ல எந்த தேசியத்திற்கும் அவர்கள் எதிரிகள். மறக்காம மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு என் தம்பி ஜல்லிக்கட்டு ராஜேஷை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.