உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் உயர்ந்தபட்ச தண்டனை: சஜித் பிரேமதாச

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் தமது அரசாங்கத்தில் விசேட நீதிமன்றம் அமைத்து, தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், அவர்களுக்கு வழங்கக் கூடிய உயர்ந்தபட்ச தண்டனையை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாக்குதல் தொடர்பில் வெளிப்பட்டுள்ள விடயங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டபோதும் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை. அதனால் இதன் பின்னர் இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை. எமது அரசங்கத்தில் அதனை நாங்கள் செய்வோம் எனவும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்வைத்து அவை தொடர்பில் விசாரணை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்திடம் கடந்த காலங்களில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால், அரசாங்கம் அதனை ஒரு சதத்துக்கேனும் கணக்கில் எடுக்காமல், அவ்வாறான தாக்குதல் நடக்காததை போன்றே செயற்பட்டு வந்தது. 

அதனால் இந்த வருட இறுதியில் மக்கள் ஆசிர்வாதத்துடன் அமைக்கப்படும் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதாவது விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நாங்கள் அமைப்போம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நீதிபதிகளையும் விசேட விசாரணையாளர்களையும் கொண்டதாக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்படும். வெளிப்படைத் தன்மையுடன் விசாரணைகளை முன்னெடுத்து, ஆணைக்குழுவால் வழங்கப்படும் பரிந்துரைகளை செயற்படுத்தி, சட்டமா அதிபர் ஊடாக குற்றவியல் வழக்குகளை தொடுத்து, இதற்காக விசேட நீதிமன்றத்தை அமைத்தும், சுயாதீன அரசாங்கத்தின் குற்றப்பத்திரிகை அலுவலகம் ஒன்றையும் அமைப்போம்.

இதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பு வழங்கிய அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டு வருவதுடன், சட்டத்தால் வழங்கப்படும் உயர்ந்த தண்டனையை வழங்கவும் எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம்.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலர் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பொய் சாட்சிகளை தயாரித்த விடயங்கள் தொடர்பிலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். முறையான விசாரணைகள் மூலம் நாங்கள் நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். எந்தக் காரணத்திற்காகவும் காட்டிக்கொடுக்க மாட்டோம். 

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகள் தொடர்பாகவும் அவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் தொடர்பாகவும் பல விடயங்கள் விசாரணைகளில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு நாங்கள் பல தடவைகள் அரசாங்கத்திடம் தெரிவித்தோம். ஆனால் அரசாங்கம் அதனை கண்டுகொள்ளவில்லை.

அதனால் இதன் பின்னர் இந்த விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு அரசாங்கத்திடம் கோரப்போவதில்லை. எமது அரசாங்கத்தில் அது தொடர்பில் விசாரணை நடத்தி உண்மயை கண்டறிய நடவடிக்கை எடுப்போம்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷவிடம் தான் ஏமாந்ததாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்திருக்கிறார். இந்த தாக்குதலுக்கு பின்னால் அரசியல் சதித்திட்டம் இருப்பதாகவே எமக்கு புலனாகிறது.

அதனால் எமது அரசாங்கத்தில் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை நிலைநாட்டியே ஆகுவோம். எக்காரணம் கொண்டும் கத்தோலிக்க மக்களையும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும், காதினால் தலைமையிலான கத்தோலிக்க அருட்தந்தைமார்களையும் ஏமாற்றாது. எப்படியாவது உண்மையை வெளிப்படுத்தி நாட்டுக்கு நிரூபிப்பேன் என்பதை, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த எனது தந்தையின் மீது ஆணையிட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *