புதுக்கோட்டை மாவட்டத்தின் தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி சு.ஷரினா கிறிஸ்ட்டுக்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பை தொடர்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அனுமதி வழங்கியுள்ளார்.
அத்துடன் இம்மாணவிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் எழுதிய திருக்குறள் உரைநூல் மற்றும் பேனாவையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் பரிசாக வழங்கி, வாழ்த்தியுள்ளார்.
தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் சுசந்த அஜித்குமார் மற்றும் திருமதி மரியகிறிஸ்டின் தம்பதியினரின் புதல்விகளான ஷரினாகிறிஸ்ட், மெனிஷாகிறிஸ்ட் ஆகியோர் கையடக்கத் தொலைபேசி கொள்வனவுக்காக தாம் சேமித்து வைத்த பணத்தை தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினர்.
இந்நிலையில் அவர்களின் இந்த நற்செயலை பாராட்டி அவர்களின் கல்விக்கு உதவும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கையடக்க கணினிகளை (TAB) வழங்கி வாழ்த்தினர்.
இந்நிலையில் மாணவி சு.ஷரினாகிறிஸ்ட் 12ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 468 புள்ளிகள் பெற்றுள்ளார். இந்நிலையில் மருத்துவத்துறையுடன் தொடர்புடைய Para Medical பிரிவில் B.Sc., (Anesthesia) பட்டப்படிப்பை தொடர உதவுமாறு கோரி அம்மாணவியின் தாய் மரியகிறிஸ்டின், தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையிலேயே தற்போது தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் இவ் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.