இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை: 

இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (17) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதோடு திறந்த வெளியில் ஊடக சந்திப்புகள் நடாத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மதி மயங்கச் செய்யவும் வாக்கு சாவடிக்குள் அனுப்பவும் முயலுவதாக தோன்றுகிறது. இவர்களின் சதி வலைக்குள் சிக்க வேண்டாம் என தமிழ் தேச உணர்வாளர்களை கேட்டுக் கொள்கின்றோம்.

வடகிழக்கில் தமிழர்கள் மத்தியில் பேரினவாத கட்சிகளின் நேரடி முகவர்களாக செயற்படுவோரை மக்கள் அறிவர். தமிழர் தேசத்தில் தேசியத்தின் ஊற்று என்றும் தாமே சுயநிர்ணயத்தின் தோற்றுவாய் எனவும் பகிரங்கமாக மேடையமைத்து கொக்கரிக்கும் கூட்டம் தற்போது இனப்படுகொலையாளர்களுக்கு துணை முகவர்களாக பொதுவெளியில் செயற்பட தொடங்கி விட்டனர்.

அத்தோடு கூட்டாக ஊடகங்களில் தோன்றி இது நட்பு ரீதியான பேச்சு வார்த்தை, சுமூக பேச்சு வார்த்தை, நம்பிக்கை தருகின்ற பேச்சு வார்த்தை, தொடர வேண்டிய பேச்சு வார்த்தை என கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு?

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடல்கள் வலுப்பெற்று வரும் களச்சூழலில் அதற்கு “எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரச்சாரம் செய்வேன்” என சூளுரைத்தவரும் அவரின் கட்சியினரும் தமிழர் வாக்குகளை இரண்டாவது தெரிவிற்கு விட்டு தள்ளுவதற்கு நேரடியாகவே முயற்சி எடுப்பதாக தோன்றுகின்றது. இது தோற்கடிக்கப்படல் வேண்டும்.

தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அத்தனை பேரும் பேரினவாதிகளே. யுத்த குற்றவாளிகளே. இவர்களே தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வந்து இனப்படுகொலை செய்தவர்கள். இனியும் இவர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தமிழர்கள் நாம் சுயநிர்ணய உரிமையுடையவர் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் யுத்த குற்றங்களுக்கு இந்த குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும் அதுவே அரசியல் நீதி என ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தித்துக் கொண்டிருக்கையில் “வடகிழக்கு தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை எம்மிடமே கொடுத்துள்ளார்கள்” எனக் கூறுவோர் இனப்படுகொலையாளர்களுடன் சல்லாபம் புரிவது எவ்வாறு? இதற்காக உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? 

தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று தமிழர்களின் அரசியலுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் உங்கள் நாடாளுமன்ற நட்பு அரசியலை நாடாளுமன்றத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் விடுதிகளுக்கும் மட்டுப்படுத்தி கொள்ளுங்கள் தமிழர்களின் தேச அரசியலுக்கு நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி விட்டோம் அதற்கான தீர்ப்பினை ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு அடுத்து பொதுத் தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவோம்.

வடக்கிற்கு அரசியல் நச்சு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 அமுல்படுத்துவோம் எனக் கூறி உள்ளனர். ரணில் ஜனாதிபதி அதிகாரத்தில் நின்று அதற்கான அனுமதி தொடர்பில் நாடகமாடியவர். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார “13 போதாது என்பதே நாம் அறிவோம். அதற்கு அப்பால் தொடர்ந்து பேசுவோம்” எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் “சர்வதேச விளையாட்டரங்கை அன்பளிப்புகள் மூலம் உருவாக்கி தருவேன்” என சபதம் எடுத்து உள்ளார். தமிழர்கள் இவற்றை எல்லாம் கேட்கவில்லை என்று மீண்டும் கூறுகின்றோம் எமக்கு எதிரான கருத்தை எமக்கு இடையே மீண்டும் மீண்டும் கூறி சிதைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் தெளிவாக கூறுகின்றோம். 

வடகிழக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து அதன் வலிகளோடு சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் முன்வைக்கையில் இவர்கள் 13 என்பதும் 13 பிளஸ் என்பதெல்லாம் தமிழர்களின் வாக்குகளை சிதறிப்பதறடிப்பதற்கே. அது மட்டுமல்ல இந்தியாவை அமைதிபடுத்தி அவர்களின் கைக்கூலிகளை தமதாக்கி தமது அரசியலை தமிழ் மண்ணில் தொடரவே முயற்சிக்கின்றனர். நாம் கேட்கின்றோம் கூறும் 13 கருத்தினை உங்ளுடைய பொது மேடைகளிலும் நீங்கள் ஆதரவு தேடும் சிங்கள பௌத்த பிக்குகள் இடமும் பகிரங்கமாக கூறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *