அரச அனுசரணையுடனான காணி அபகரிப்பு குறித்து ஐ.நா கவனம் செலுத்த வேண்டும் – விக்கினேஸ்வரன்

வடக்கு, கிழக்கில் குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கையின் ஊடாக வெளிக்கொணரப்படவேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரையான ஒருமாதகாலத்துக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வில் இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் எழுத்துமூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இருப்பினும் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கும், இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் அவசியமான நியாயபூர்வமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்ற விமர்சனம் பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் வலியுறுத்தப்படவேண்டிய விடயங்கள் பற்றிக் கருத்துரைக்கையிலேயே சி.வி.விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடரில் முன்னைய அமர்வுகளின்போது இலங்கையிடம் எதிர்பார்க்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பது பற்றி ஆராயப்படும். 

குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் முன்னைய அறிக்கையில் பாதுகாப்புத்துறைசார் செலவினங்களைக் கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழித்தல், கடந்தகால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளல், உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்து நியாயமான விசாரணைகளை மேற்கொள்ளல், வட-கிழக்கில் படையினரின் எண்ணிக்கையைக் குறைத்தல், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்துதல், ஊடக சுதந்திரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. 

எனவே இவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிலவும் தாமதம் குறித்து இம்முறை ஆராயப்படும். அதேவேளை எதிர்வரும் கூட்டத்தொடரின்போது இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்படவுள்ள உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், தற்போது வட, கிழக்கில் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுவரும் காணி அபகரிப்புக்கள் தொடர்பில் பிரஸ்தாபிக்கப்படவேண்டும். 

அதிலும் குறிப்பாக குருந்தூர், தையிட்டி, செட்டிக்குளம், நாவற்குழி போன்ற இடங்களில் அரச அனுசரணையுடன் காணி அபகரிப்புக்கள் இடம்பெறுகின்றன என்ற உண்மை வெளிக்கொணரப்படவேண்டும்.

அதேபோன்று அரசியலமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத்தெரிவித்து பௌத்த பிக்குகள் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். இருப்பினும் சில அரசியல் காரணங்களுக்காக சிங்கள பௌத்த அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குகின்றது. 

எனவே இதுபற்றி உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் குறிப்பிடப்படுவதுடன், அரசின் இத்தகைய செயற்பாடுகள் நாட்டின் எதிர்கால நலனுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது பற்றி சுட்டிக்காட்டப்படவேண்டும்.

மேலும் உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை நடாத்துவதில் தொடர் காலதாமதம், வட-கிழக்கு மாகாணங்களில் உயர்பதவிகளுக்குத் தமிழ் தெரியாத சிங்களவர்கள் நியமிக்கப்படல் என்பன பற்றியும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்படவேண்டும் என்று  வலியுறுத்தினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *