அரசியலமைப்பு பேரவையில் வடக்கு – கிழக்கை பிரதிநிதித்துவப்படும் தமிழர் ஒருவர் கூட இல்லாமல் இருப்பது எங்களை தேசிய வாழ்க்கையில் இருந்து வெளியேற்றுவதற்கான ஒரு நடவடிக்கை என தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“தமிழரசுக் கட்சியின் மாநாடு எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது. இந்த தடவை இம் மாவட்டத்தில் புதிய தலைவர் தெரிவு செய்யக் கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. அதனால் கட்சி உறுப்பினர்கள் கட்சி யாப்பின் அடிப்படையில் மூன்று பேரை இந்தப் பதவிக்கு பிரேரித்துள்ளார்கள். இந்த மூன்று பேரும் இறுதி வரைக்கும் தலைவர் தெரிவில் இருந்தால் யாப்பின் அடிப்படையில் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் பொதுச் சபை உறுப்பினர்கள் தெரிவு செய்வார்கள்.
வவுனியா மாவட்டத்தில் இருந்து பொதுச் சபைக்கு 23 பேர் அங்கம் வகிப்பார்கள். வவுனியா மாவட்ட கிளையானது தலைவர் தெரிவில் போட்டியிடுபவர்களை சந்தித்து உரையாட நேரம் கேட்டிருந்தார்கள். அதனடிப்படையில் சந்தித்து உரையாடினேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த சந்திப்பு நடைபெறுகிறது.
இதன்போது, ஜனாதிபதி நாடாளுமன்ற கூட்டத் தொடரை நிறைவு கொண்டு வர முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு என்ன என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது,
நாடாளுமன்ற கூட்டத்தொடரை நிறைவுக்கு கொண்டு வர வேண்டிய தேவை கிடையாது. ஏனெனில் அது விசேட சந்தப்பத்தில் தான் நிகழ வேண்டும். அதற்கான பாரம்பரியங்கள் இருக்கின்றது. ஆகவே தவறான, நோக்கத்திற்காக நாடாளுமன்ற கூட்டத் தொடரை நிறைவு படுத்துவது பிழையானது.
சில குழுக்களின் தலைவர்களை மாற்றுவதற்காக ஜனாதிபதி முதலில் இவ்வாறு நடந்துள்ளார். அதைச் செவ்வதற்கு தான் மீண்டும் இவ்வாறு முயற்சிப்பதாக கருதுகிறார்கள். இது பொருத்தமற்ற செயற்பாடு அதனை நாம் எதிர்ப்போம்” என தெரிவித்துள்ளார்.