அத்தியாவசியசேவையாக “புகையிரதசேவை” ஜனாதிபதியால் பிரகடனம்:

பயணிகள் புகையிரதசேவை, பொருள் விநியோகம் ஆகிய சேவைகள் புகையிரதத்திணைக்களத்தினாலும் அதனுடன் இணைந்த சேவைத்துறையினராலும் தடையின்றி, பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவகையில் முன்னெடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தப்பட்டு “புகையிரதசேவை” ஐ அத்தியாவசியசேவையாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (12) மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பள உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து புகையிரத சாரதிகள் சங்கத்தினர் நேற்று திங்கிட்கிழமை நள்ளிரவு முதல் மேற்கொண்ட பணிப்புறக்கணிப்புப்போராட்டத்தால் இன்றைய தினம் பயணிகள் புகையிரதசேவை பாரிய நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இன்று மாத்திரம் சுமார் 166 பயணிகள் புகையிரதசேவைகள் இரத்துச்செய்யப்பட்டன.

 அதிக சனநெரிசலுடன் பொதுமக்கள் புகையிரதசேவையைப் பயன்படுத்தியமையை அவதானிக்கமுடிந்தது. புகையிரதத்தில் பாதுகாப்பற்ற விதத்தில் பயணம் செய்த மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் உயிரிழந்துள்ளனர். 

மேலும் ஒருவர் புகையிரதத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 புகையிரத சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோது, ‘புகையிரத சாரதிகள் சங்கத்தின் போராட்டம் முறையற்றது. 

இதனால் பொதுமக்கள் முகங்கொடுத்த அசௌகரியங்கள் மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கு புகையிரத சாரதிகள் பொறுப்புக்கூறவேண்டும்’ என்று குறிப்பிட்டதோடு, தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு புகையிரதசேவையை அத்தியாவசியசேவையாக உடனடியாகப் பிரகடனப்படுத்துமாறு தான் ஜனாதிபதியிடம் எழுத்துமூலம் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *