கைக்குண்டு மற்றும் வாளுடன் தென்னிலங்கை இளைஞன் யாழில் கைது!

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கேகாலையை சேர்ந்த இளைஞன் ஒருவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

யட்டியந்தோட்டை, அலகொலவத்தை, பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார். 

சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த திங்கட்கிழமை, முகமூடிகள் அணிந்தவாறு நால்வர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று நுழைந்து வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டிக்கு தீ வைத்து விட்டு , வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து தப்பி சென்று இருந்தது.

பின்னர் கொள்ளையடித்து சென்ற மோட்டார் சைக்கிளை வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள மாசியப்பிட்டி சந்திக்கு அருகில் நடு வீதியில் வைத்து தீ மூட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால், மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, வந்தனர். 

அந்நிலையில் நவாலி பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த யட்டியாந்தோட்டையை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் , ஒரு கைக்குண்டு மற்றும் கஜேந்திரா வாள் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இளைஞனை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்கும் பொலிஸார் , வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட ஏனைய மூவரையும் அடையாளம் கண்டுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *