ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயரதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு :

இலங்கையின் பசுமை வலுசக்தித்துறையை மேம்படுத்துவதற்கு ஆதரவு வழங்கப்படுமென ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் (Jin Liqun)தெரிவித்தார்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் ஜின் லிக்யுன் மற்றும் அதன் சிரேஷ்ட முகாமைத்துவத்தினர் நேற்றுமுன்தினம் (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்த போதே இதனைத் தெரிவித்தனர்.

ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் கடனுதவியின் கீழ் இதுவரை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், இலங்கையுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டு நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆதரவு வழங்குவதாக தலைவர் ஜின் லிக்யுன் இங்கு தெரிவித்தார்.

அதன்படி, இலங்கையில் வலுசக்தி ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதுடன், பசுமை வலுசக்தி, பசுமை போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தி எதிர்காலத்தில் ஆதரவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வட்டி வீதங்களைக் குறைத்தல் மற்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பொருளாதார ரீதியாக இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை விளக்கிய ஜனாதிபதி, தேசிய பொருளாதாரத்தின் நன்மைகளை நாட்டின் சாதாரண மக்களுக்குக் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று தெரவித்தார்.

அதன்போது, அரசதுறையை மறுசீரமைத்து செயற்திறன் மற்றும் வினைத்திறனான அரச சேவையை உருவாக்கும் திட்டங்களை விளக்கிய ஜனாதிபதி, வினைத்திறனான அரச சேவையை வழங்குவதில் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்படி, மக்களுக்கு சேவைகளை வழங்கும்போது, கிராமத்திற்கும் நகரத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதுடன், சர்வதேச ரீதியான கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

குறைந்த செலவில் மின்சாரம் வழங்கும் பிராந்தியமாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் வகையில் தரவு மையம் ஒன்றை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகளில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முறையான வேலைத்திட்டமொன்றை கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

மேலும், கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் புதிய சீர்திருத்தங்கள் குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் தலைவர் உள்ளிட்ட குழுவினருக்கு ஜனாதிபதி விளக்கினார்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ஆர். அபொன்சு உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *