முன்னாள் மேயர் சமன் லால் பிணையில் விடுதலை:

மொரட்டுவை மாநகர சபை முன்னாள் முதல்வர் சமன் லால் பெனாண்டோ, இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) அவர் கடந்த செப்டெம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தமது பதவிக் காலத்தில் வீதி அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை தமக்கு வேண்டியவர்களுக்கு வழங்கியதன் மூலம் முறையற்ற நிதி கொடுப்பனவுகள் காரணமாக அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரை, ரூ. 50,000 ரொக்கப் பிணை மற்றும் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.

அத்துடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டதுடன், மொரட்டுவை மாநகர சபை வளாகத்திற்குள் நுழையவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *