மாகாணசபை தொடர்பில் தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மட்டுமே இந்தியாவால் எதனையும் செய்யமுடியும்:

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை தொடர்பில் காத்திரமான நடவடிக்கைகளை இந்தியாவினால் முன்னெடுக்கக்கூடியதாக இருக்கும் என்று இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். மாகாணசபையை வலியுறுத்தும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், சில சந்தர்ப்பங்களில் அந்த மாகாண சபை தேவையில்லையென்றும் தெரிவிக்கும் நிலைப்பாடு இருந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலையில் இவ் விடயத்தில் இந்தியாவினால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்னெடுத்து இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதில் சிக்கல் நிலை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் தூதரகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் ஊடக நிறுவன பிரதானிகளுடனான சந்திப்பின் போது இந்த விடயங்களை தூதுவர் தெரிவித்தார். இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கை 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதன்கீழ் தமிழ் பேசும் மக்களுக்காக 13ஆவது அரசியல் திருத்தத்தின் கீழ் மாகாணசபை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் (1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆந் திகதி)

இதற்காக தேர்தல் முதல் முறையாக 1988 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 04 ஆம் திகதி நடைபெற்றது. இறுதியாக இந்தத்தேர்தல் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெற்றது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணங்களுக்கு அப்பால் அதாவது கிழக்கு பிரிந்த மாகாணத்திற்காக தேர்தல் நடைபெற்றது.

வட மத்திய மாகாணத்திற்காக தேர்தல் ( 08.09.2012 ) சபரகமுவ மாகாணத்திற்காக தேர்தல் (08.09.2012) மத்திய மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) வட மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013 ) வடமேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (21.09.2013) மேற்கு மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) தென் மாகாணத்திற்காக தேர்தல் (29.03.2014) ஊவா மாகாணத்திற்காக தேர்தல் (20.09.2014) நடைபெற்றது.

கடந்த 11 வருடங்களாக மாகாணசபை தேர்தல் நடைபெறுவதில் இலுபறி நிலை இருந்துவருகிறது. இந்நிலையில் மாகாண சபை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பில் கேட்கப்பட்ட போதே தூதுவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் ஐக்கியம் இல்லாத போதிலும் இந்தியா மாகாண சபை தொடர்பில் தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் தூதுவர் தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இந்தியா மாகாண சபைக்குட்பட்ட அதிகாரங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் இலங்கை தமிழ் பேசும் மக்களுக்கு இந்த மாகாணசபையின் கீழ் முழுமையான பிராந்திய நிர்வாகம் நடைபெறவேண்டும் என்பதில் இந்தியா ஆர்வமாக இருந்து வருகிறது. அதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால் தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியில் விசேடமாக வடக்கு, கிழக்கில் உள்ள அரசியற்கட்சிகளுக்கிடையில் இதுவிடயத்தில் ஒருமித்த கருத்துப்பாடு இல்லை. இந்த கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மாகாண சபை தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு உறுதியான நிலைப்பாட்டை அறியத்தந்தால், இந்தியா பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *