நான்கு மணி நேர கால அவகாசத்துக்குள் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப் பேச்சாளருமான மகேஷ் கருணாதாச தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் சேவையின் கீழ், நாளாந்தம் 1500 முதல் 2000 வரை கடவுச்சீட்டுகளும் வழக்கமான சேவையின் கீழ் சுமார் 1000 கடவுச்சீட்டுகளும் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் சேவையில் கடவுச்சீட்டுக்களைப் பெறுவதற்கு 20,000 ரூபாவும் வழக்கமான சேவையில் பெறுவதற்கு 10,000 ரூபாவும் அறவிடப்படுகிறது.
கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது தேசிய அடையாள அட்டையில் ஏதேனும் தெளிவின்மை இருந்தால், கால தாமதங்கள் ஏற்படக்கூடும். கடவுச்சீட்டிற்கு விண்ணப்பிக்கும் போது மக்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழில் கவனம் செலுத்தி, அவை தெளிவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு தௌிவான தகவல்களுடன் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நான்கு மணி நேரத்தில்,கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.