இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், வவுனியா மாவட்டத்திலும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் இன்று (28) சேவையில் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் இணைந்த நேர அட்டவணையில் தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என கொண்டுவரப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலையிலிருந்து வவுனியாவில் பேருந்துகள் சேவையில் ஈடுபடாத காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
தனியார் பேருந்துகளில் முண்டியடித்து மக்கள் செல்ல முற்பட்ட போதிலும் போதுமான பேருந்து வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதோடு, பலர் தமது பயணத்தை இடைநிறுத்தவேண்டிய நிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.