இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்கள் அடுத்த 3 நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்துவரப்படுவர் :

இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்களை அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி சட்ட அமுலாக்க நிறுவனங்களின் சுதந்திரத்தை நிறுவியுள்ளது என்று மேலும் தெரிவித்தார். 

அதன்படி, இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள், இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர். 

பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர். , இது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இந்தோனேசிய பொலிஸார் நடத்திய 7 நாள் கூட்டு நடவடிக்கையின் விளைவாகும் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்தார். 

குறித்த நடவடிக்கைக்கு இந்திய புலனாய்வு அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளதுடன், அதற்கேற்ப திட்டம் செயல்படுத்தப்பட்டதாகவும், முடங்கிப் போயிருந்த புலனாய்வு அமைப்பின் சில பகுதிகள் இப்போது செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் கூறினார். 

பல சந்தர்ப்பங்களில், அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் கும்பல் வளர்ந்துள்ளதாகவும், தங்களின் இருப்பு மற்றும் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் வளர்க்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். 

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு அரசாங்கம் என்றவகையில் அவை அனைத்தையும் நிறுத்தியுள்ளதாகவும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை உருவாக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் உறவுகள் குறித்து தற்போது உன்னிப்பாக விசாரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

அத்தகைய நபர்களின் சொத்துக்கள் குறித்து தற்போது விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் அது குறித்து அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார். 

“சட்டத்திற்கு மேல் எதுவும் இல்லை. சட்டத்தின் முன் எங்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் பொருந்தாது. சட்டத்தின் முன் அனைவரும் சமம். 

நாங்கள் அதை ஒரு நடைமுறையாக இந்த சமூகத்திற்கு கொண்டு வருகிறோம். யாரையும் சட்டத்திற்கு மேல் இருக்க நாங்கள் அனுமதிப்பதில்லை. 

இதை நாங்கள் சமூகத்திற்கு வலியுறுத்துகிறோம். நாட்டிற்கு நீதி மற்றும் நியாயத்தை வழங்குவதே எங்கள் அரசியல் ஆர்வம். 

மேலும், சட்டத்தின் ஆட்சியை நிறுவி, சட்டம் அனைவருக்கும் சமம் என்ற செய்தியை சமூகத்திற்கு வழங்குவது. 

இதை ஒரு தரப்படுத்தப்பட்ட சமூகமாக மாற்றுவதன் மூலம், நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ முடியும். 

எனவே, வாக்குறுதியளித்தபடி, சமூகத்திற்கு ஒரு வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் வழங்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். 

அந்த விடயங்களில், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது விசேட அம்சமாகும். 

இதுவரை, கிட்டத்தட்ட 75 பேருக்கு சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 20க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 

அவர்கள் தொடர்பில் சட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது இந்தோனேசியாவின் காவலில் உள்ளவர்களை நாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

அவர்கள் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவுடன், அவர்களுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்படும். 

எனவே, பாதாள உலக குழுவாக இருந்தாலும் சரி, அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பொலிஸாராக இருந்தாலும் சரி, அதிகாரிகளாக இருந்தாலும் சரி, அனைவரும் சட்டத்திற்கு உட்பட்ட நாடாக மாற்றுவோம். 

அதிகாரத்தை பயன்படுத்தி சமூகத்தை வழிநடத்த நாங்கள் இடமளிக்க மாட்டோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *