இலங்கையின் தற்போதைய அரசாங்கம், எந்தவித பாகுபாடும், பிரிவினையும் இல்லாமல் அனைத்து மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கும், அனைத்து மக்களுக்கும் சமமான மரியாதை, அங்கீகாரம், கண்ணியம் மற்றும் மனித உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை (22) பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு அரசாங்கமாக, ஐக்கியம், மரியாதை, பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளுக்கான மரியாதை ஆகிய கருத்துக்களை ஊக்குவிக்க நாங்கள் எப்போதும் பாடுபடுகிறோம்.
மனித உரிமைகளை மதிக்கும் கலாசாரம் சமூகத்தில் ஒரு பொது இயல்பாக மாறாவிட்டால் அல்லது ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், நிறுவனங்கள் எவ்வளவு எளிதில் சரிந்துவிடும் அல்லது பலவீனமடையக்கூடும் என்பதை நாம் காணலாம்.
ஒரு அரசாங்கமாக நாம் கட்டியெழுப்பியுள்ள கொள்கைகளுடன் நாம் அதனை ஆரம்பிக்கலாம். பிரிவினை, வெறுப்பு அல்லது வன்முறையை விதைக்கும் கூற்றுக்களைத் தவிர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஜனாதிபதி உட்பட எங்கள் அரசாங்கத்தின் அனைத்து பிரதிநிதிகளும் இந்தக் கொள்கையை தொடர்ந்து பேணி வருகின்றனர். இருப்பை அல்லது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கு இனவெறி, வன்முறை அல்லது வெறுப்பைத் தூண்டுவதை நாட மாட்டோம் என்ற எங்கள் வாக்குறுதியில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம்.
இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம். பொதுமக்கள் உட்பட அனைவரினதும் கருத்துக்களுக்கு செவிமடுக்க நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம். அதன்படி, சரியாக செயற்படவும் பொதுமக்களின் உணர்வுகளுக்கு பதிலளிக்கக்கூடியதாக இருக்கவும் நாங்கள் பாடுபடுவோம் என்றார்.