அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்கும் நோக்கில் புதிய சலுகை மறுசீரமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வர்த்தக செயன்முறையின்கீழ் புதிய சலுகை மறுசீரமைப்புக்கள் வளர்ந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (Developing Countries Trading Scheme (DCTS) ) எனப்படும் திட்டத்தின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். இந்த சலுகை சீர்திருத்தங்கள், பிரித்தானியாவுடன் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு உதவுவதோடு, பிரித்தானிய சந்தைகளில் விலைகளை குறைக்கும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.
இந்த சலுகை சீர்திருத்தங்கள், வளர்ச்சிக்கான வர்த்தகம் (Trade for Development) எனப்படும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை உள்ளிட்ட ஏனைய நட்பு நாடுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும், பிரித்தானிய தொழில்கள் மற்றும் நுகர்வோர்களுக்கு தரமான மற்றும் மலிவான பொருட்களை பெற உதவவும் இவை உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய சலுகை மறுசீரமைப்பு விதி முறைகள் மூலம் இலங்கை, நைஜீரியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் இருந்து, ஆசியா மற்றும் ஆபிரிக்காவில் இருந்து பெறப்படும் கூறுகளை பயன்படுத்தியும், பூஜ்ஜயம் வீத வரிவிலக்குடன் பொருட்களை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் முடியும்.
பிரித்தானிய வர்த்தக நிறுவனங்கள், சர்வதேச நட்புறவு நாடுகள், பாரிய இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்த அறிவிப்பு, வெளியிடப்பட்டது. இதில் இலங்கை அரசு மற்றும் ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் ஆகியவற்றுடன் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆடைத் துறைக்கான விதிமுறைகள் மிகுந்த சுதந்திரத்துடன் இலங்கைக்கு நேரடியான பலனாக மாற்றப்படுகின்றன. இதனால், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல்வேறு நாடுகளில் இருந்து தங்கள் உற்பத்திக்கு தேவையான பொருட்களை சுதந்திரமாக பெற முடியும். இது 2026 ஆரம்பத்தில் நடைமுறைக்கு வருகின்றது.
இலங்கை உள்ளிட்ட வளர்ச்சியடைந்த நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களை தொடர்ந்து, இலங்கையின் ஆடைத் துறைக்கு பெரும் நன்மைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதுடன் புதிய சலுகை மறுசீரமைப்புகள் காரணமாக, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகள் பிரித்தானியாவிற்குள் வரிவிலக்குடனுடன் ஏற்றுமதி செய்ய முடியும். இலங்கை போன்ற நாடுகள் வர்த்தகம் செய்வது எளிதாகும் என்பதுடன் இதனால் வேலை வாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு கிடைக்கும். பிரித்தானிய நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும், போட்டி விலைகளில் தயாரிப்புகள் கிடைப்பதால் நன்மை ஏற்படும்.
இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் கூறுகையில்:
“இது இலங்கை ஆடைத் துறைக்கும், பிரித்தானிய நுகர்வோருக்கும் வெற்றி. பிரித்தானியாவே இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாகவும், அதில் 60 வீதத்துக்கும் அதிகமாக ஆடைகளாக இருப்பதால், இந்த அறிவிப்பை உற்பத்தியாளர்கள் வரவேற்பர். வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் இந்த திட்டத்தின் கீழ் ஆடைகள் மட்டுமல்லாமல் பல பொருட்களுக்கு இலங்கை பயன்பெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம். இலங்கை அரசு ஏற்றுமதியை அதிகரிக்க உறுதியுடன் செயல்படுவதால், இந்த சீர்திருத்தங்கள் மேலும் பல துறைகளுக்கு நன்மை பயக்கும். இலங்கை – பிரித்தானியாவுக்கிடையிலான பொதுவான நலனுக்காக, நாங்கள் தொடர்ந்து ஒத்துழைக்க உறுதியளிக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் பொதுச்செயலாளர் யொஹான் லோரன்ஸ் கூறுகையில்,
பிரித்தானியாவின் வர்த்தக செயன்முறையின்கீழ் புதிய சலுகை மறுசீரமைப்புக்களை எங்களது தொழில்துறையினர் உற்சாகமாக வரவேற்கின்றனர். இந்த திட்டத்தை பயனுள்ளதாக மாற்ற ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் பல ஆண்டுகளாக பிரித்தானிய அரசுடன் இணைந்து செயல்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் நாம் பிராந்தியத்தில் அதிக அளவில் மூலப்பொருட்களை பெற்றுக்கொண்டு, அதனூடாக வரிவிலக்கு வசதியுடன் பிரித்தாகியாவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய முடியும். இது ஒரு முக்கிய மாற்றமாகும்.
675 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிலான சந்தையாக பிரித்தானியா விளங்குகிறது. இது இலங்கை ஆடைத்துறையின் 15 வீத ஏற்றுமதியை உள்ளடக்கியது. ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக தொழில் உள்ளது. இந்த அறிவிப்பு வேலைவாய்ப்புகளை நிலைநிறுத்தவும் ஏற்றுமதியை அதிகரிக்கவும் உதவும்.” என்றார்.
அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக திட்டம் பிரித்தானியாவால் கடந்த 2023ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையையும் உள்ளடக்கிய 65 நாடுகளுக்கு இது பொருந்துகிறது. ஆயிரக்கணக்கான பொருட்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படுகிறது.
தற்போது அறிவிக்கப்பட்ட புதிய மறுசீரமைப்புக்கள் இந்த சலுகைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. பிரித்தானிய நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட உற்பத்திச்சங்கிலிகள், முதலீடுகள் மற்றும் வளர்ந்துவரும் சந்தைகளில் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க இது உதவும்.
மேலும், இலங்கையினால் பிரித்தானிய சந்தைக்குள் நுழைவதற்கான தொழில்நுட்ப உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் வழங்கும். குறிப்பாக, உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் துறையில் தரநிலைகள் பூர்த்தி செய்வதற்கான ஆதரவை வழங்கும்.