இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்ப்பளிக்கக் கோரி இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களை விசாரிக்க உயர் நீதிமன்றம் இன்று (11) அனுமதி அளித்தது.
ஏ.எச்.எம்.டி. நவாஸ், பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது.
இந்த மனுவை அயேஷானி ஜயவர்தன மற்றும் சுரேஷ் விதுஷா ஆகிய இரண்டு பெண்கள் தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, நுவான் போபேகே, ரயில்வே திணைக்களத்தில் தற்போது நிலவும் 106 வெற்றிடங்களை நிரப்புவதற்காக அந்த திணைக்களம், ஜூன் மாதம் 13 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறினார்.
கல்வித் தகுதிகளுக்கு கூடுதலாக பிற தகுதிகளின் கீழ் ஆண்கள் மட்டுமே இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு சுட்டிக்காட்டினார்.
இது முற்றிலும் சட்டவிரோதமான செயல் என்று சுட்டிக்காட்டிய சட்டத்தரணி, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 12(2) இன் கீழ் பிரதிவாதிகளான பெண்களுக்கு சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுவதற்காக உள்ள அடிப்படை உரிமை மற்றும் பாலின அடிப்படையில் வித்தியாசமாக நடத்த முடியாது என குறிப்பிட்டு பெண்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக வலியுறுத்தினார்.
இந்த வர்த்தமானி அறிவிப்பின் மூலம் தங்களுக்கு விருப்பமான வேலையைச் செய்வதற்கான அடிப்படை உரிமையும் மீறப்பட்டுள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.
இதன் மூலம் தனது கட்சிக்காரர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக உத்தரவிடுமாறும், இந்தப் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற குறித்த வர்த்தமானி அறிவிப்பில் உள்ள பிரிவை நீக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றத்தைக் கோரினார்.
முன்வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, குறித்த வர்த்தமானி அறிவிப்பு மனுதாரர்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறுகிறதா? என்பதை ஆராய விசாரணை நடத்த மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முடிவு செய்தது.
அதன்படி, இந்த மனுவை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் திகதியிட்டது.