இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02) அனுமதி வழங்கியுள்ளது.
அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கு உத்தரவிடுமாறு கோரி சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் என்பவரால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மாயாதுன்ன கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது மனுதாரர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், “இராமநாதன் அர்ச்சுனா யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிந்தெடுக்கப்பட்ட காலப்பகுதியில் வைத்தியர் துறையிலிருந்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்துள்ளார்.”
“இதனால் அரசியலமைப்புச் சட்டத்தின்படி இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தகுதியற்றவர் ” என சட்டத்தரணி அசோக் பரன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்றும் குறிப்பிட்டார்.
அதன்படி, அவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்று சட்டத்தரணி குறிப்பிட்டார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானித்தது.
இதேவேளை, இந்த மனு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
எவ்வாறாயினும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பது மற்றும் வாக்களிப்பதை தடுக்கும் வகையில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்கப் போவதில்லை என்று நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.