15 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம் தொடர்பில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் இலங்கைத் தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்துமூலமாக வலியுறுத்தியுள்ளது.

இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞன் மரணித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதிக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கடிதம் ஒன்றை நேற்று அனுப்பிவைத்துள்ளனர்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தில் சனிக்கிழமை (09) காலை எதிரிமன்சிங்கம் கபில்ராஜ் என்பவரின் உடல் மீட்கப்பட்டமை தொடர்பில் உங்கள் கவனத்துக்கு அறிவுறுத்துகிறோம்.

2025.08.07 ஆம் திகதியன்று இலங்கை இராணுவத்தின் 63ஆவது பிரிவு முகாமுக்கு 05 ஆண்கள் இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.

இவர்களில் கபில்ராஜ் என்பவர் காணாமல் போயுள்ளார். பின்னர் அவரது உடல் முத்தையன்கட்டு குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் சில இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.தடையற்ற வகையில் முழுமையான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்துவது மட்டுமல்லாமல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தின் அடக்குமுறையான நடத்தை மற்றும் அதிகப்படியான பிரசன்னத்தையும் உங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும், இந்த சம்பவத்தில் நீதிக்கான செயல்முறை தலையீடின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்யுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

இன்றுவரை தொடரும் இராணுவத்தினரின் கொடூர செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுவதும் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முழு ஹர்த்த்தாலில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *