வீரமுனைப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு:

வீரமுனைப் படுகொலை நினைவேந்தல் நிகழ்வு 35 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை (12)  மாலை ஆலய பூசையுடன் ஆரம்பமானது.

அம்பாறை மாவட்டத்தில்   35 ஆண்டுகளுக்கு முன் நடந்தேறிய வீரமுனைப் படுகொலை நினைவேந்தலானது வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையார்  ஆலயத்திற்கு அருகில்  அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மங்கள விளக்கேற்றல் ஏற்றி வைக்கப்பட்டு 2 நிமிட அஞ்சலி  செலுத்தப்பட்டது.

பின்னர்  படுகொலை செய்யப்பட்டவர்கள் ஞாபகார்த்த தூபியில் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

வீரமுனைப் படுகொலை 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  12ம் திகதி  கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

குறித்த படுகொலை செய்யப்பட்ட நாளின் 35 ஆம் ஆண்டு  நினைவு நாள் இன்றாகும். சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இன வன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990   தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகஸ்ட் 12 ம் நாளன்று   முஸ்லிம் ஊர்காவல்படையினர் இராணுவத்தின் துணையுடன் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்பட்டதாக பதிவுகள் பல உள்ளன.  

இதன்போது   400க்கும் அதிகமான தமிழ் மக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள்  குழந்தைகள் உட்பட 55 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இதுவரையில் இல்லை. இவ்வாறு படுகொலை நடந்து அதில் படுகாயமடைந்தவர்கள் அம்பாறை உட்பட பல வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டபோதும் அவர்களும் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டனர்.

1990ஆம் ஆண்டு வீரமுனை மக்கள் முற்றாக அங்கிருந்து துரத்தப்பட்டு அக்கிராமத்தினை அபகரிக்க மேற்கொண்ட முயற்சி அன்றைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கோவிந்தன் கருணாகரத்தின் முயற்சியினால் தடுத்து நிறுத்தப்பட்டு வீரமுனை மக்கள் மீள குடியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்ப பாராளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர்  இளையதம்பி சிறிநாத் ,ஞானமுத்து சிறிநேசன் ,மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) காரைதீவு  பிரதேச சபை  தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்,   இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் செயலாளரும் கல்முனை தொகுதி இணைப்பாளருமான அருள். நிதான்சன், சிவில் சமூக செயற்பாட்டாளரும் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க ஆலோசகருமான தாமோதரம் பிரதீபன், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு செயலாளர் காந்தன் காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்  உட்பட ஆலய நிர்வாக குழுவினர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்  பொதுமக்கள் படுகொலையானவர்களின் உறவுகள் என பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *