வடக்கில் யாழ்ப்பாணத்தை முன்னிலைப்படுத்தி முதலீடு , தொழில் முனைவோர் மற்றும் பிராந்திய வளர்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் முகாமைத்துவக் கழகம் “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ஐ ஏற்பாடு செய்துள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்குடனும் முயற்சியுடனும் முகாமைத்துவக் கழகம் “வடக்கு முதலீட்டு மாநாடு 2026” அண்மையில் சினமன் கிராண்ட் ஹோட்டலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் மற்றும் 22 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள மாநாட்டில் முகாமைத்துவக் கழகம் மற்றும் அதன் யாழ்ப்பாணக் கிளை இணைந்து வடக்கில் முதலீடு செய்யுங்கள் வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்துள்ளன.
இந்த “ வடக்கு முதலீட்டு மாநாடு 2026 ” வடக்கு மாகாணத்தை போட்டித்திறனுள்ள முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக மாற்றுவதற்கான ஒரு மூலோபய தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை முன்னுரிமைத் துறைகளில் உள்ள வணிக வாய்ப்புக்களுடன் இணைக்கும். இரு நாட்கள் இடம்பெறும் இந்த மாநாடு அரசாங்கத் தலைவர்கள், தனியார் துறைநிர்வாகிகள், முதலீட்டாளர்கள், தூதர்கள், தொழில்முனைவோர், படைப்பாளிகள், புதுமையானவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒரே மேடையில் இணைக்க உதவும்.
இந்த மாநாடு பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது, இதில் முக்கிய உரைகள், துறைகளுக்கேற்ப குழு விவாதங்கள், திட்டக் கண்காட்சிகள், சந்திப்புகள், அமர்வுகள் மற்றும் முதலீட்டாளர்கள் சுற்றுப் பேச்சுகள் ஆகியன இடம்பெறும்.
பலதுறைகளில் முதலீடுகளை இந்த மாநாடு வெளிப்படுத்தக்கூடியதாக அமைகின்றது. குறிப்பாக வேளாண்மை மீன்பிடி, மற்றும் விலங்கு வேளாண்மை, பாரம்பரியம், சுற்றுலாத்துறை தொழில்கள், சுகாதாரம் சித்தமருத்துவம், கல்வி, தகவல்தொழில்நுட்பம், ஆகியவற்றை குறிப்பிடலாம். அத்துடன், இணைப்பு மதிப்பூட்டல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், நிலைத்தன்மை, டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியனவும் இதில் அடங்கும்.
இதேவேளை, வடக்கிற்காக 3 புதிய தொழில்துறை மண்டலங்களை உருவாக்கும் இலங்கை முதலீட்டு சபைத் திட்டங்கள் மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் அடங்கும். முகாமைத்துவக் கழகம் இந்த முயற்சியை ஒரு நிகழ்வாக அல்லாமல் நீடித்த முயற்சியாக்கும் வருடாந்த வடக்கு முதலீட்டு அமைப்பாக நடத்தப்படும். நிரந்தர வடக்கு முதலீட்டு அமைப்பு உருவாக்கப்படும். வடக்கு பிராந்திய முதலீட்டு வாய்ப்புக்களை வெளிப்படுத்தும் ஒரு டிஜிட்டல் தளம் உருவாக்கப்படும்.
இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் யாழ்ப்பாணக்கிளையின் தலைவர் அநுராகவன், “ இலங்கையை உலகத்திற்கு எவ்வாறு மாற்றமுடியும். இதற்கு முன்னர் நாம் அதனை செய்துள்ளோமா ? ஆம் 1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் மைதானங்களுக்குள் ஒரு இளம் அணி நுழைந்த போது, அது வலுவிழந்த அணியாக இருந்தது. அதற்கு பல தடைகள் காணப்பட்டன. ஆனால் நாம் அனைவரையும் தோற்கடித்து, சவால்களையும் எதிர்கொண்டு வென்றோம். இலங்கையை உலகெங்கிலும் உள்ள அனைத்து பின்தங்கிய அணிகளின் விருப்பமான அணியாக மாற்றினோம். அது எவ்வாறு நடந்தது. நல்லதொரு தலைவர் இருந்தமையாலா ? அல்லது எங்களிடம் நல்ல யுக்தி காணப்பட்டதாலா ? அல்லது எங்களிடம் அர்ப்பணிப்புள்ள அணியின் உறுப்பினர்கள் காணப்பட்டமையாலா? அதற்கு அப்பால் சிறந்ததொரு இணைவு காணப்பட்டமையே அதற்கான பதிலாகும். அதேபோல் இலங்கையை உலகிற்கு முன்மாதிரியாக காண்பிப்பதற்கு எம்மிடம் சிறந்த தலைமைத்துவம் உள்ளது. இந்த நாடு எவ்வாறு முன்னேற வேண்டும் என்பதற்கான உபாயத்துடன் பணியாற்றி வருகின்றோம். இருப்பினும் ஒவ்வொரு வீரர்களும் ஒவ்வொரு மாகாணங்களும் ஒவ்வொரு மாவட்டங்களும் ஒவ்வொரு பிரஜைகளும் இலங்கையை வெற்றியான நாடாக எவ்வாறு மாற்றுவது என்பது தொடர்பில் சிந்தித்து செயற்பட வேண்டும். இந்த மாநாட்டின் ஊடாக அனைத்து பிரஜைகளும் தேசிய உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பங்களிப்பதற்கு சம வாய்ப்பு கிடைக்கும் வகையில் பொருளாதாரத்தை வளர்ச்சியடையச் செய்ய முன்வர வேண்டும்” என்றார்.
இதன்போது உரையாற்றிய முகாமைத்துவக் கழகத்தின் திட்ட தலைவர் இந்திரா கே. ராஜபக்ஷ,
“இலங்கை முகாமைத்துவக் கழகம் மற்றும் எங்கள் கிளையான யாழ்ப்பாணக் கிளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வு வெறுமனே மாநாடு மாத்திரமல்ல, இது ஒரு மாற்றத்திற்கான தருணமாகும் இலங்கையின் வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத் திறனை உருவாக்கி நிலையான முதலீடு, புதுமையின் பிராந்திய நிலையமாக நிலைநிறுத்தும் நோக்கும் முயற்சியும் கொண்ட தருணமே இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட முகாமைத்துவக் கழகம் முகாமையாளர்களுக்கிடையில் சிறியதொரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டது. வடக்கு மாகாணம் நீண்டகாலமாக ஏராளமான இயற்கை வளங்கள், படித்த இளைஞர்கள் துடிப்பான தொழில் முனைவோர் மனப்பான்மை ஆகியவற்றால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் உண்மையான ஆற்றல் மிக நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமல் உள்ளது. அந்த இடைவெளியை குறைக்கவும் பார்வையை யதார்த்தமாகவும் சவால்களை வாய்ப்புக்களாக மாற்றுவதற்கு நாங்கள் ஒன்று கூடுகின்றோம்.” என்றார்.
முதலீட்டு சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, தேசிய ஏற்றுமதியாளர்கள் சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை, கைத்தொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, மாகாண அதிகாரிகள் உள்ளிட்ட அரச தனியார் வலையமைப்பால் அனுசரணை வழங்கப்படும் இந்தமாநாடு, முதலீட்டாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கல்வியியலாளர்கள் தொழில் முனைவோர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
