யாழில். தியாக தீபத்திற்கு சிலை வைத்து , வீதிக்கு பெயர் சூட்ட தீர்மானம்:

தியாக தீபத்திற்கு சிலை வைப்பதற்கும் , பொக்கணை வீதிக்கு திலீபன் வீதி என பெயர் மாற்றவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தியாக தீபம் திலிபனின் நினைவு தினம் நேற்றைய தினம் வியாழக்கிழமை உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டதுடன் திலிபனின் தியாகத்திற்கு மதிப்பளிக்குமுகமாக தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன. 

பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தலைமையில் சபை முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிர்களை தியாகம் செய்த மாவீரர்கள் பொதுமக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அஞ்சலிச்சுடரினை பிரதேச சபையின் உறுப்பினர் விஜயதாரணி ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. தொடந்து தவிசாளரினால் அஞ்சலியுரை நிகழ்த்தப்பட்டது. 

உறுப்பினர்களும் தமது அஞ்சலிகளை செலுத்தினர். 

இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற பிரதேச சபையின் அவை அமர்வில் தியாக தீபத்தினை நினைவு கூர்ந்து முன்னைய காலங்களில் திலீபன் வீதி என பிரயோகத்தில் காணப்பட்டு பின்னரான சூழ்நிலையில் பொக்கணை வீதி காணப்படும் வீதியை புனரமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவடுவதற்கும் அவ் வீதியின் பெயரை நிர்வாக நடைமுறைகளுக்கு அமைவாக திலீபன் வீதி என மீளவும் மாற்றியமைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தியாக தீபம் திலீபன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட கிராமத்தினைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தியாக தீபம் திலிபன் அவர்களுக்கு திருவுருவச் சிலையினை 1975 ஆம் ஆண்டின் 4 இலக்க காட்சிப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சி அமைச்சரின் அனுமதியைப் பெற்று நிறுவுவதெனவும் தவிசாளர் தியாகராஜா நிரோஷினால் முன் வைக்கப்பட்ட தீர்மானமும் சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *