முற்றிலும் டிஜிட்டல் மயமாகும் ஷெங்கன் விசா:

ஐரோப்பிய ஒன்றியம் பாரம்பரிய ஷெங்கன் விசா ஸ்டிக்கரை நீக்கத் தயாராகி வருவதால், ஐரோப்பாவின் 29 நாடுகளின் ஷெங்கன் விசா முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.

இதுவரை விசா ஸ்டிக்கர் பதிக்கப்பட்ட இடத்தில் ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் பார்கோடு பதிக்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் கடந்த ஆண்டு ஷெங்கன் பகுதிக்கான பயணத்திற்கான விசா விண்ணப்ப செயல்முறையை ஒன்லைன் தளத்திற்கு மாற்ற முடிவு செய்திருந்தனர்.

இதற்குப் பிறகு, ஸ்டிக்கர் தொடர்பில் ஒரு புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஐரோப்பாவிற்குச் செல்லும் பயணிகள் காணும் மாற்றம் இது மட்டுமல்ல. ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாப்பான 2D பார்கோடு வடிவத்தில் டிஜிட்டல் மாற்றங்களை நோக்கி நகர்கிறது.

இது பல தசாப்தங்களில் முதல் முறையாக ஷெங்கன் விசா முறையில் செய்யப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தங்களில் ஒன்றாகும். இந்த நடவடிக்கை செயல்முறையை விரைவுபடுத்தி முற்றிலும் டிஜிட்டல் பயண அனுபவத்தை வழங்கும்.

அதாவது எல்லையை அடைந்ததும், பயணிகள் இனி பார்கோடை ஸ்கேன் செய்வார்கள், இது மையப்படுத்தப்பட்ட EU விசா அமைப்புடன் நேரடியாக இணைக்கப்படும். இது விசாவின் செல்லுபடியாகும் தன்மை மற்றும் தனிப்பட்ட தரவு பற்றிய தகவல்களை குடிவரவு அதிகாரிகளுக்கு வழங்கும்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஒரு சோதனையாக ஐரோப்பிய ஒன்றியம் 70,000 டிஜிட்டல் ஷெங்கன் விசாக்களை வழங்கியது. அதன் வெற்றிக்குப் பிறகு, தற்போது முழுமையாக செயல்படுத்தப்படுகிறது.

ஷெங்கன் விசாவில் ஐரோப்பாவிற்கு வருபவர்கள் முதல் முறையாக தங்கள் பயோமெட்ரிக்ஸை நேரில் சமர்ப்பிக்க வேண்டும். ஐரோப்பாவிற்கு தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு இந்த செயல்முறை விரைவாகவும் எளிதாகவும் இருக்கும்.

ஷெங்கன் விசாவில் ஏற்பட்ட மாற்றத்தால் ஐரோப்பாவிற்கு பயணம் செய்யும் இந்திய குடிமக்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள். இவற்றில் மிக முக்கியமானது, டிஜிட்டல் விசா பயோமெட்ரிக் இ-கேட் அணுகல் மூலம் நுழைவதை எளிதாக்கும்.

மட்டுமின்றி அலுவலகத்தில் காத்திருக்கும் தேவையை வெகுவாகக் குறைக்கும். குறிப்பாக ஐரோப்பாவிற்கு தொடர்ந்து பயணம் செய்பவர்களுக்கு விடயங்கள் மிகவும் எளிதாக இருக்கும்.

ஷெங்கன் என்பது ஒரு குறுகிய கால விசா ஆகும், இது ஷெங்கன் பகுதிக்குள் 90 நாட்கள் வரை பயணிக்க அனுமதிக்கிறது. இதனால், ஐரோப்பா நாடுகளில் பயணம் செய்ய விரும்பும் மக்களிடையே இது மிகவும் பிரபலமானது.

ஷெங்கன் பகுதியில் ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரீஸ், ஹங்கேரி, ஐஸ்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்த்துகல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து போன்ற 29 ஐரோப்பிய நாடுகள் அடங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *