மன்னாரில் புதிதாக அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூரண கடையடைப்பு :

மன்னார் தீவு பகுதியில் புதிதாக இரண்டாம் கட்டம் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தி கோபுரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தற்போது மன்னார் – மதவாச்சி பிரதான வீதியூடாக  கொண்டு வரப்பட்டு கொண்டு இருக்கும் காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பொருட்களை மன்னார் நகருக்குள் கொண்டு வருவதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (05) மன்னாரில் அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளாரின் ஏற்பாட்டில் இரண்டாவது நாளாக இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கும் வகையில் மன்னார் நகர பகுதியில் உள்ள ஒரு சில உணவகங்களை தவிர அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டது.

மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லாது குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மன்னார் தீவுக்குள் இரண்டாம் கட்ட காற்றாலை திட்டங்களுக்கான மூலப் பொருட்கள் எதுவும் தீவு பகுதிக்கு கொண்டு வரக்கூடாது   என்பதை கருத்தில் கொண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்று வருகின்ற குறித்த அமைதி போராட்டத்தில் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார், அருட்தந்தையர்கள், பொது அமைப்புக்கள், சிவில் அமைப்புக்கள், மீனவ அமைப்புகள், வர்த்தகர்கள்,பொதுமக்கள், இளைஞர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் மன்னார் சௌத்பார் பகுதியில் உள்ள வீதிகள் நேற்றைய தினம் இரவு காற்றாலை மின் கோபுரங்களை கொண்டு வருவதற்கு ஏற்ற வகையில் திடீர் என புனரமைப்பு செய்யப்பட்ட நிலையில் மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பணிகள் இடை நிறுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *