பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது:

இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க பொதுச்செயலாளர் லீலாவதி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

யாழ் அரியாலை செம்மணி சித்துபாத்தி மயானத்தில் சிறுவர்களின் உடற்பாகங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இறுதி யுத்த காலப்பகுதியில் நான்கு இராணுவ முகாங்களில் பெற்றோர்கள் சரணடையும்போது தமது பிள்ளைகளையும் கூட்டிச்சென்று இராணுவத்திடம் கையளித்தனர். அவ்வாறு கையளிக்கப்பட்டவர்களில் 29 சிறுவர்கள் உள்ளடங்குகின்ற நிலையில் இதுவரை அவர்கள் தொடர்பான எந்த தகவலும் இல்லை. 

மறைந்த ஆண்டகை ஜோசப் வழங்கிய தகவலின் அடிப்படையில் இறுதி யுத்தத்தில் 16,000 பேர் உயிருடன் சரணடைந்ததாக சர்வதேசத்துக்கு தெரிவித்திருக்கிறார். அவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் இதுவரை தெரியாது. 

சர்வதேச நாடுகளில் குறிப்பாக காசாவில் இடம்பெறும் யுத்தத்தில் சிறுவர்கள் பாதிக்கப்படுவற்கு எதிர்புத் தெரிவிக்கும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் ஈழத்தில் சரணடைந்த சிறுவர்கள் தொடர்பில் ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 

செம்மணி சிந்துபாத்தி தொடர்பில் சர்வதேசம் வரை கவனம் திரும்பி உள்ள நிலையில் அந்தப் பகுதியில் மீட்கப்படும் சிறுவர்களின் உடற்பாகங்கள் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட சிறுவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு வலுவாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட தரப்பினரான எமக்கு இலங்கை நீதிக கட்டமைப்பில் நம்பிக்கை இல்லை ஐநாவில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில் சர்வதேசம் இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் பொறுப்புக் கூற வைக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *