பிரான்ஸில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்:

பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்சேயில் காட்டுத்தீ கட்டுக்கடங்காமல் பரவி வருவதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி ஒன்பது தீயணைப்பு வீரர்கள், 22 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 110 பேர் காயமடைந்துள்ளனர் என பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. மார்சேய் பகுதியை சென்று பார்வையிட்ட உள்நாட்டு அமைச்சர் புருனோ ரீடெய்லியூ தற்போது தீயை அணைக்கும் பணியில் 800 தீயணைப்பு வீரர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

“கடற்படை தீயணைப்பு வீரர்கள் கையில் குழாய்களுடன் கொரில்லாப் போரை நடத்தி வருகின்றனர்” என மார்சேயின் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையை மேற்கோள் காட்டி நகர மேயர் பெனாய்ட் பயான் தெரிவித்துள்ளார்.

தீப் பரவல் நிமிடத்திற்கு 1.2 கிலோ மீற்றர் (0.7 மைல்) வேகத்தில் பரவியுள்ளது. காற்று, அடர்ந்த தாவரங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளால் தீ வேகமாக பரவி வருவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் பல மணி நேரம் மூடப்பட்டிருந்த மார்சேய் புரோவென்ஸ் விமான நிலையம் அந்நாட்டு நேரப்படி இரவு 21:30 மணிக்கு (GMT 19:30) பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதேபோன்றதொரு சம்பவம் இதற்கு முன்னர் நிகழ்ந்தது இல்லை என விமான நிலையத்தின் தலைவர் ஜூலியன் காஃபினியர் தெரிவித்துள்ளார்.

மார்சேய்க்கு வடக்கே பென்னஸ்-மிராபியூ அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ, சுமார் 700 ஹெக்டயர் (7 சதுர கி.மீ) பரப்பளவுக்கு பரவியதாகக் கூறப்படுகிறது.

அதேவேளை அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பிடித்ததால் இந்த காட்டுத் தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிரான்சில் திங்களன்று நார்போன் அருகே மற்றுமொரு காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 60 கிலோ மீற்றர் (40 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளதால் சுமார் 2,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவு எரிந்து நாசமாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு ஸ்பெயினின் கட்டலோனியா பகுதி உட்பட ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் காட்டுத்தீ பதிவாகியுள்ளது. கிழக்கு பகுதி தாரகோனாவில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் செவ்வாயன்று 18,000 க்கும் மேற்பட்ட மக்கள் தமது வதிவிடங்களுக்குள் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

இரவு முழுவதும் பலத்த காற்று வீசியதால் தீ அணைப்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3,000 ஹெக்டயர் நிலப்பரப்பளவுக்கு தீ பரவியுள்ளது.

ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு வெப்பம் அதிகரித்தமையினால் ஸ்பெயினின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தன.

கிரேக்கத்தில் நாடு முழுவதும் திங்களன்று சுமார் 41 காட்டுத்தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அவற்றில் ஏழு காட்டுத் தீ திங்கள் மாலை வரை செயல்பாட்டில் இருந்தன என்று தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்கு மற்றும் தென் ஐரோப்பாவின் பெரும்பகுதி கோடை கால ஆரம்பத்தில் கடும் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டது, தீ விபத்துக்களினால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *